நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
அரசாங்கம் மற்றும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் (CEYPETCO) இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளன.
அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று (31-10-2026) இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலைதிருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கச்சா எண்ணெய்
உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக உள்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகப் பொருளாதார மற்றும் சக்தித்துறை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாகக் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது.
அத்தோடு சர்வதேச எரிபொருள் போக்குவரத்தின் பிரதான பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல்கள் இடைமறிக்கப்படுதல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சர்வதேச சந்தையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
போக்குவரத்து கட்டணங்கள்
இந்தநிலையில் கடல்சார் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில்வழக்கமான நடைமுறைப்படி இன்றிரவு நள்ளிரவு புதிய விலைகளை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CEYPETCO அறிவிக்கும் விலை திருத்தங்களுக்கு அமைவாக, லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்களும் தங்களது விற்பனை விலைகளை உடனடியாக மாற்றியமைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள போதிலும், அமெரிக்க டாலருக்கு (USD) எதிரான இலங்கை ரூபாயின் (LKR) மதிப்பு ஒப்பீட்டளவில் ஸ்திரமாக நிலவி வருவது உலகளாவிய விலை உயர்வின் முழுமையான சுமை நுகர்வோரை வந்தடையாமல் ஓரளவிற்குத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

