IT துறையில் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தாலும் பிரயோஜனம் இல்ல! 2030-ல் 10 பேர் செய்யும் வேலையை 3 AI ரோபோட் செய்யும்!
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் குறித்த ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 300 முதல் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய பணிகள் உருவாகும் என்று கணித்துள்ளது. அதேபோல சேவை துறையில் சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான வேலைகள் இல்லாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் செய்து வரும் வேலைகளை AI மூலமாக செய்ய தொடங்கி விடுவார்கள். இதனால் நல்ல AI சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு 100 முதல் 200 பில்லியன் டாலர் வரை லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 மனிதர்களுக்கு பதிலாக 3 AI ஏஜென்ட்கள்: இதுவரையில் ஐடி நிறுவனங்களில் வழங்கும் சேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறப்படும். ஆனால் இனி 10 மனிதர்கள் செய்கின்ற வேலையை 3 AI ஏஜென்ட்கள் செய்யத் தொடங்கி விடும்.

மனிதர்கள் குறைய குறைய.. அவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் மிச்சமாகும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அதே அளவுக்கு AI ஏஜென்டுகளை சரிவர இயங்க வைக்கவும் செலவு செய்ய வேண்டி வரும். இதனால் நிறுவனங்கள் மனிதர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து பணமாக பெறுவதை விட்டுவிட்டு ஒரு வேலையை முடித்து தரும் பட்சத்தில் அதற்கு பணம் வாங்கும் முறைக்கு மாறிவிடுவார்கள்.
இதுவரையில் ஐடி நிறுவனங்கள் பிரமிடு மாதிரியை கொண்டு செயல்பட்டன. அதாவது முதலில் சீனியர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு கீழ் நிறைய ஃபிரஷர்கள் வேலை செய்வார்கள். சீனியர்களாக இருப்பவர்களில் மேனேஜர்கள் மற்றும் 10, 20 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் இருப்பார்கள்.
ஆனால் இனிவரும் காலங்களில் டைமண்ட் மாதிரியை கொண்டு ஐடி நிறுவனங்கள் செயல்பட தொடங்கும். முன்பெல்லாம் சீனியர்களின் வழிநடத்தலுக்கு ஏற்ப ஃபிரஷர்கள் செயல்பட்டார்கள். இப்போது பணிக்கு வரும் ஃபிரஷர்கள் நிறுவனத்தில் இணைந்த உடனே வேலை செய்ய தொடங்கி விட வேண்டும். முன்பு 4,5 வருடம் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு பிரமோஷன் கிடைக்கும். அவர்களை அடுத்த பதவியில் பணியமர்த்துவார்கள். ஆனால் இனி அந்த நிலை இருக்காது. யாருக்கு AI ஸ்கில் அதிகமாக இருக்கிறதோ? அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
அது மட்டுமல்லாமல் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்ட அறிக்கையில் 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 2500-க்கும் அதிகமான வேலை வாய்ப்பு அறிவிப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 40-க்கும் மேற்பட்ட AI சார்ந்த வேலைவாய்ப்புக புதிதாக உருவாகியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது, இனி ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் “எனக்கு இத்தனை வருடம் பணி அனுபவம் இருக்கிறது” என்று சொல்வது செல்லாது. பணிபுரியும் ஊழியர்கள் புதிதாக வரும் ஏஐ தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு போக முடியும்.
ஆக ஐடி நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக AI தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. IT ஏஜெண்டுகளை சரிவர இயங்க வைக்க நிறுவனங்கள் ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்களுக்கு தகுந்த பயிற்சி வழங்கி அவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் கம்பெனிக்கும் லாபம். பல வருடங்களாக நிறுவனத்திற்கு உழைத்த ஊழியர்களுக்கும் நல்லது.
இது ஒரு புறம் இருக்க.. மறுபுறம் பெரிய ஐடி நிறுவனங்களில் AI சார்ந்த ரோல்களில் இருக்கும் ஊழியர்களில் வெறும் 10 முதல் 15 சதவீதத்தினர் மட்டும்தான் AI வேலைகளை செய்கின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் 85 சதவீதத்தினர் AI பணிகளை செய்யவில்லை.
இன்னும் IT துறை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. ஐடி துறையில் பழைய வேலை வாய்ப்புகள் குறையும் என்றாலும் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பது இன்றைய இளைஞர்கள் மற்றும் ஐடி துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். இனி AI தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் ஊழியர்களுக்கும், புதிதாக வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்து கொள்ளும் நிறுவனங்களுக்கும் தான் எதிர்காலம் என்றே சொல்லலாம்.
