Last Updated:
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குச்சந்தையில் அறிமுகம் செய்த போது 1,119 ரூபாயாக இருந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஒரு பங்கின் விலை 22 சதவீதம் உயர்ந்து 1,358 என்ற தொடக்க விலையைத் தொட்டது.
பங்குச் சந்தையில் களமிறங்கிய முதல் நாளிலேயே, சந்தை மூலதனத்தில் நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் படைத்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டை, இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடும் நிகழ்ச்சி, மும்பையில் உள்ள தேசிய பங்குச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவி நீடா அம்பானி குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி, தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதே தங்கள் நோக்கம் என்றார். தனது சகோதரி இஷா மற்றும் சகோதரர் அனந்துடன் சேர்ந்து விண்வெளி இணைப்பு முதல் செயற்கை நுண்ணறிவு வரை, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்போம் என்று அவர் உறுதியளித்தார்.
1977-ல் ரிலையன்ஸின் முதல் IPO நிகழ்வை முகேஷ் அம்பானி நினைவுகூர்ந்ததைச் சுட்டிக்காட்டி ரிலையன்ஸ் ரீடெய்ல் இயக்குநர் இஷா அம்பானி பெருமிதம் தெரிவித்தார். சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் தனது தந்தை, இன்றும் ஒவ்வொன்றையும் புதிதாகத் தொடங்குவது போலவே கனவு காண்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் அனந்த் அம்பானி, ஒவ்வொருவரின் கையிலும் இணையம் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு கிராமமும் உலகத்தோடு இணைந்திருக்க வேண்டும் என்ற கனவின் பெயர்தான் ஜியோ என்றார். ஒரு சாதாரண இந்தியராலும் அசாதாரணமான கனவுகளைக் காண முடியும் என்பதை தனது தாத்தா திருபாய் அம்பானி நிரூபிக்கிக் காட்டியதாகவும் பெருமிதம் கூறினார். தனது வாரிசுகளின் இந்தப் பேச்சைக் கேட்டு நெகிழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கண் கலங்கினார்.
அதைத் தொடர்ந்து கவுன்டவுனுடன் இந்தியப் பங்குச்சந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பட்டியலிடப்பட்டது. ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, பாரம்பரிய முறைப்படி மணி அடித்துத் தொடங்கி வைத்தனர். அறிமுகம் செய்த போது 1,119 ரூபாயாக இருந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஒரு பங்கின் விலை 22 சதவீதம் உயர்ந்து 1,358 என்ற தொடக்க விலையைத் தொட்டது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12,50,586 கோடியைத் தொட்டது.
இதன் மூலம், 15,89,000 கோடி சந்தை மதிப்புடன் முதலிடத்தில் இருக்கும் தனது தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அடுத்தபடியாக, நாட்டின் 2-வது மதிப்புமிக்க நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் உருவெடுத்துள்ளது. இதற்கிடையே, அறிமுகம் செய்த இரண்டாவது நாளில் மேலும் ஐந்து சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 27 சதவீதம் உயர்ந்திருக்கிறது ஜியோ. இரண்டாம் நாள் தொடக்கத்தில் பங்கு விலை ரூ. 1,480-ஐ நெருங்கியது, தற்போது ரூ. 1,420 நிலையில் உள்ளது.


