International
oi-Halley Karthik
சிட்னி: உலகில் எங்கு, எப்போது போர் வெடிக்கும்? சூரிய புயல் எப்போது தாக்கும்? என எதுவும் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆஸ்திரேலிய ரெட் கிராஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் கெட்டுப்போகாத டின் உணவுகளை சேமித்து வைக்குமாறு ஆஸ்திரேலிய ரெட் கிராஸ் அந்நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளது. புயல், சூறாவளி என பேரிடர் குறித்து பெரிய எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், இந்த மாதிரியான அறிவிப்பு வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஒரே நாளில், கடைகளில் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி குவிக்காமல், வாராந்திர மளிகை பொருட்களுடன் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக.. அவசரகால பொருட்களை சேமிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ரெட் கிராஸ் அமைப்பு கூறியிருக்கிறது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத, டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் சுத்தமான பாட்டில் குடிநீரை சேமிக்க வேண்டும் என்று அமைப்பு அறிவுறுத்தியிருக்கிறது. உங்கள் பகுதியின் பாதிப்பு அபாயத்தை பொறுத்து, குறைந்தபட்சம் 72 மணி நேரம் முதல் 14 நாட்கள் வரை வீட்டிலேயே தங்கியிருக்க தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
உணவு மற்றும் தண்ணீருடன், பேட்டரி அல்லது விண்ட்-அப் மூலம் இயங்கும் ரேடியோ, டார்ச் லைட், முதலுதவிப்பெட்டி, ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் முக்கியமான தனிப்பட்ட ஆவணங்களையும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய ரெட் கிராஸ் அமைப்பு இந்த அவசரக்கால எச்சரிக்கையையும், ஆலோசனைகளையும் வழங்கியதற்கு பின்னால் எந்த குறிப்பிடத்தக்க ஆபத்தும் இல்லை. மாறாக, உலகளாவிய சூழ்நிலைகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் தட்பவெப்ப நிலைமைகளை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர், பிரிட்டன் அரசும் இதுபோன்ற எச்சரிக்கையை கொடுத்திருந்தது. 3 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்து, அவசர நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதேபோல ஸ்வீடன், நார்வே, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும், தங்கள் குடிமக்களை வாரக்கணக்கில் உணவுகளை சேமித்து வைக்க அறிவுறுத்தி வருகின்றன. போகிற போக்கை பார்த்தால், உலகில் மிகப்பெரிய பேரழிவு ஏதேனும் நடக்க இருக்கிறதோ? என்கிற கேள்வி எழுந்திக்கிறது.

