Last Updated:
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட், இந்தியப் பங்குச்சந்தைகளில் மிக பிரம்மாண்டமாய் பட்டியலிடப்பட்டது.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட், இந்தியப் பங்குச்சந்தைகளில் மிக பிரம்மாண்டமாய் பட்டியலிடப்பட்டது.
மும்பையில் உள்ள தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரம்பரிய மணி அடித்தல் முறையுடன் வர்த்தகம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மணி அடித்து தொடங்கி வைத்தனர். பங்குச்சந்தையில் களமிறங்கிய முதல் நாளிலேயே, சந்தை மூலதனத்தில் நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பெற்றுள்ளது.
அறிமுகம் செய்த போது 1,119 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலை 21.36 சதவீதம் உயர்ந்து 1,358 என்ற தொடக்க விலையாக அதிகரித்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12,50,586 கோடியைத் தொட்டது. இதன் மூலம், 15,89,000 கோடி சந்தை மதிப்புடன் முதலிடத்தில் இருக்கும் தனது தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அடுத்தபடியாக, நாட்டின் 2-வது மதிப்புமிக்க நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் உருவெடுத்துள்ளது.
இதேபோல், இந்தியாவின் மிகப்பெரிய 5 பொதுப் பங்கு வெளியீடுகளில், முதலீட்டாளர்களுக்குப் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் அதிக லாபத்தை வழங்கியதிலும் ‘ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜியோவின் பங்குகள் ஏற்கனவே சொன்னதுபோல வெளியீட்டு விலையை விட 21.36 சதவீதம் அதிக விலையில் பங்குச்சந்தையில் அறிமுகமாகின. இதன்மூலம் எல்.ஐ.சி, ஹூண்டாய் மோட்டார், பேடிஎம் போன்ற பிற பெரிய ஐபிஓ-க்களை விட ஜியோ அதன் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த லாபத்தைக் கொடுத்துள்ளது.
மேலும், பங்குதாரர்களுக்கான சிறப்புப் பிரிவில் பங்குகள் பெற்றவர்களுக்கு இது பெரும் லாபமாக அமைந்தது. குறைந்தபட்ச அளவாக 23 பங்குகள் கொண்ட ஒரு லாட் ஒதுக்கீடு பெற்ற பங்குதாரர், பட்டியலிடப்பட்ட விலையில் ரூ.5,497 லாபம் அடைந்துள்ளார். 12 பங்குகள் கொண்ட ஒரு லாட் பெற்ற சில்லறை முதலீட்டாளர்கள் ரூ.2,868 லாபம் பெற்றுள்ளனர். இதற்கு மாறாக எல்.ஐ.சி, ஹூண்டாய் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வெளியீட்டு விலையை விடக் குறைவான விலையிலேயே சந்தையில் அறிமுகமாயின. குறிப்பாக என்.எஸ்.இ பங்குகள் சுமார் 1% மட்டுமே கூடுதல் விலையில் பட்டியலிடப்பட்டன.
இதற்கிடையே, பங்குச்சந்தை அறிமுகத்தின் மூலம் கிடைத்த லாபங்களைத் தாண்டி, தொலைத்தொடர்புத் துறையின் சந்தை மதிப்பீட்டு வரிசையையும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மாற்றியமைத்துள்ளது. பாரதி ஏர்டெல்லை முந்தி, இந்தியாவின் மிக மதிப்புமிக்க தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.

