
மித்தெனிய பகுதியில் நபரொருவரும் இரு சிறுவர்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் டுபாயில் கைது செய்யப்பட்,டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மித்தெனிய பகுதியில் நபரொருவரையும் இரு சிறுவர்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
வலஸ்முல்லை நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கரலஹேன்கே அனோஷா லக்மாலி என்ற 34 வயதுடைய பெண் சந்தேகநபரே, இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர், பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரும் இரு சிறுவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்துக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பிலேயே இவருக்கு எதிராக வலஸ்முல்லை நீதிமன்றம் திறந்த பிடியாணையைப் பிறப்பித்திருந்தது.
கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு எதிராகப் பல்வேறு குற்றப் பின்னணிகள் பதிவாகியுள்ளன. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி கட்டுவன பொலிஸ் பிரிவில் சட்டவிரோதக் கூட்டமொன்றில் பங்கேற்றமை தொடர்பிலும் இவருக்கு எதிராக வலஸ்முல்லை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், இவர் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கட்டுவன பகுதியில் இடம்பெற்ற ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பாகவும், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் முன்னதாக பொலிஸாரால் இருமுறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

