இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மற்றும் அவர்களின் நலன், நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வெளிவிவகார அமைச்சின் தகவலின்படி, இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும், ருமேனியாவின் தொழிலாளர், குடும்பம், இளைஞர் மற்றும் சமூக ஒற்றுமை அமைச்சர் பெட்ரே-ஃபுளோரின் மனோலேவுக்கும் இடையில் நேற்று புக்கரெஸ்டில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் வாழ்த்துகளை ருமேனிய அமைச்சருக்குத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அண்மையில் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளை அடையாளம் காணுதல், இருதரப்பு தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை – ருமேனியா தொழிலாளர் ஒத்துழைப்புக்கான கூட்டுப் பணிக்குழுவின் ஊடாக இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களை மேலும் மேம்படுத்துதல் மற்றும் புதிய ஒத்துழைப்புத் துறைகளை ஆராய்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தச் சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. (a)


