Last Updated:
அரசாங்கங்கள் மற்றும் வர்த்தக உலகப் பிரதிநிதிகள் அனைவரும் ‘எரிசக்தி பாதுகாப்பை’ முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா – ஈரான் போரால் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை, 2027ஆம் ஆண்டிலும் போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக இருந்தது. ஆனால், போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட விநியோகத் தடை காரணமாக, எண்ணெய் விலை உயர்ந்து 100 டாலர்க்கு மேல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரில் சர்வதேச எரிசக்தி வார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குநர் பாத்தி பிரோல் (Fatih Birol), அமெரிக்கா – ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு சர்வதேச எரிசக்தி சந்தை இருந்த நிலைக்கு, அடுத்த ஆண்டில் மீண்டும் திரும்புவதற்கான எந்தவொரு நம்பகமான வழியையும் தெரியவில்லை என்று கூறினார்.
எனவே, அரசாங்கங்கள் மற்றும் வர்த்தக உலகப் பிரதிநிதிகள் அனைவரும் ‘எரிசக்தி பாதுகாப்பை’ முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த எரிசக்தி நெருக்கடி, இந்தியா போன்ற வளரும் நாடுகள் மற்றும் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களுக்குப் புதிய பொருளாதாரச் சவால்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


