Last Updated:
இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவில் பிராந்தியப் பாதுகாப்புப் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டின் வான் பாதுகாப்புப் படையினர் வெறும் 12 மணி நேரத்திற்குள் 11 பேலிஸ்டிக் ஏவுகணைகள், 1 க்ரூஸ் ஏவுகணை மற்றும் 2 ட்ரோன்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்த அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் வசிக்கும் மற்றும் அங்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தியக் குடிமக்களுக்கு இந்தியத் தூதரகம் அவசரப் பாதுகாப்பு மற்றும் பயண எச்சரிக்கை அறிக்கையை (Travel Advisory) வெளியிட்டுள்ளது. சவூதியில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உள்ளூர் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் வான்வெளியில் முறியடிக்கப்படும் காட்சிகளையோ அல்லது அவை தரைதட்டி வீழ்ந்த இடங்கள் தொடர்பான விவரங்களையோ வீடியோவோ, புகைப்படமாகவோ பதிவு செய்வதும், சமூக வலைதளங்களில் பரப்புவதும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
சவூதி சிவில் பாதுகாப்பு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதுபோன்ற தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புக்குள்ளான இடங்களின் தகவல்களைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, இந்தியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவைகள் வரும் 2026 நவம்பர் 7 ஆம் தேதி வரையிலும், ஜேத்தா நகரத்திற்கான விமானங்கள் 2026 அக்டோபர் 31 வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் சீராக இயக்க ஆயத்தமாகி வருகிறது.
விமானப் போக்குவரத்து ரத்தால் சவூதியில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகளுக்கு உடனடியாக உதவ ஜேத்தா மற்றும் மக்கா ஆகிய நகரங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இந்தியத் தூதரகம், உள்ளூர் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து வழங்கி வருகிறது.
மேலும், விமான ரத்து காரணமாக ஏற்பட்டுள்ள விசா காலாவதி பிரச்சனைகள் மற்றும் பயணிகள் தாயகம் திரும்புவதில் உள்ள காலதாமதங்கள் குறித்து, சவூதியின் ஹஜ் உம்ரா அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் இந்திய அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

