ரூ.250 முதலீடு செய்து.. வருடத்திற்கு ரூ.80 முதல் ரூ.90 லட்சம் வருமானம் ஈட்டும் கேரள தம்பதியினர்!
வெறும் 250 ரூபாய் முதலீட்டை இன்று வருடத்திற்கு ரூ.80 முதல் ரூ.90 லட்சம் வருமானம் ஈட்டி தரும் வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளனர் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர். இன்றைய இளைய தலைமுறை பெற்றோர் ஆதரவு மற்றும் தொழில் தொடங்குவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் இருந்தும் பின் வாங்குகின்றனர். ஆனால் முதலீடு குறைவாக இருக்கிறதே.. இதை வைத்து ஜெயித்து விட முடியுமா என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் தொழில் செய்து.. இன்று அதில் லாபமும் பார்த்து வருகின்றனர். அவர்கள் அப்படி என்ன செய்கின்றனர்? எப்படி இவ்வளவு பெரிய வருமானம் சாத்தியமானது? என்ற விபரங்களை பார்ப்போம்.
கேரளாவைச் சேர்ந்த சிஜே மற்றும் அவருடைய கணவர் தங்கச்சன் ஆகிய இருவரும் கடந்த 2007-ஆம் ஆண்டு வெறும் 250 ரூபாய் முதலீடு செய்து தங்கள் வீட்டில் 5 காளான் பெட்களை அமைத்தனர்.

இந்த சிறிய முயற்சியை படிப்படியாக அதிகரித்தனர். 2009-ஆம் ஆண்டு தங்களுடைய காளான் பண்ணைக்கு “கூன் ஃப்ரெஷ் (Coon Fresh)” என்று பெயரிட்டனர். 5 காளான் பெட்களில் ஆரம்பித்த காளான் வளர்ப்பு.. விரைவில் 6000 வரை விரிவடைந்தது. தற்போது இவர்களுடைய பண்ணையில் ஆண்டுக்கு சுமார் 12 டன் காளான் உற்பத்தி செய்யப்படுகிறது.
தொழில் விரிவாக்கம்: பல வழிகளில் இருந்து வருமானம் பெற வேண்டும் என்று நினைத்த இந்த தம்பதியினர் வெறும் காளான் வளர்ப்போடு நின்றுவிட வில்லை. தங்களுடைய தொழிலை பல வழிகளிலும் விரிவு படுத்தினர். அதில் காளான் விதை விற்பனையும் அடங்கும். மற்ற காளான் விவசாயிகளுக்கு தேவையான காளான் விதைகளையும் விற்பனை செய்து வருகின்றனர். அதோடு மதிப்பு கூட்டப்பட்ட காளான் சார்ந்த உணவுப் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
பயிற்சி வகுப்புகள்: தாங்கள் கற்றுக்கொண்ட தொழிலை பிறர்க்கும் பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் தொடங்கி விவசாயிகள் வரை அனைவருக்கும் காளான் வளர்ப்பு குறித்த முறையான பயிற்சியை வழங்கி வருகின்றனர். இதுவரையில் சுமார் 10,000-த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இதன் மூலமாகவும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
எதிர்கால இலக்கு: தற்போது ஒவ்வொரு ஆண்டும் ரூ.80 முதல் ரூ.90 லட்சம் வரை வருமானம் ஈட்டி வரும் இந்தத் தம்பதியினர்.. அடுத்த கட்ட இலக்காக ரூ.1.6 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளனர். தொழில் தொடங்க பெரிய முதலீடு அவசியம் இல்லை. சிறிதாக தொடங்கினாலும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு இருந்தால் எத்தகைய வருமானமும் சாத்தியமே என்பதற்கு இந்த ஜோடி ஒரு சிறந்த உதாரணம்.

