Last Updated:
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸை சந்தித்தார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸை சந்தித்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த மார்கோ ரூபியோ மற்றும் அவரது மனைவி ஜெனட் ரூபியோவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசை சந்தித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மும்பையில் நடைபெறும் ஃபிரீடம் 250 எனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மார்கோ ரூபியோ, தாஜ் ஹோட்டலில் உள்ள 2008 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் மார்கோ ரூபியோ, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டுமிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளோம். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் டிரம்ப் அதிருப்தியில் உள்ளார்.” என்று பேசினார்.
இதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன், நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய சிறப்பு நேர்காணல் இன்றிரவு 9 மணிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.


