Last Updated:
இந்த ஐபிஓ வெளியீடு இன்று அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை விற்பனைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் ரூ. 30,213 கோடி மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO) இன்று திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முழுமையாக நிறைவடைந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இந்த ஐபிஓ வெளியீடு இன்று அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை விற்பனைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை நிர்ணயம் பங்கு ஒன்றுக்கு ரூ. 1,065 முதல் ரூ. 1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு தொடங்கிய முதல் நாளான இன்று காலை 10:39 மணி நிலவரப்படி, 1.03 மடங்கு சந்தா பெறப்பட்டுள்ளது. அதாவது, விற்பனைக்கு விடப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு எதிராக, முதலீட்டாளர்கள் சுமார் 20.25 கோடிங்குகளுக்கு ஏலம் கோரியுள்ளனர்.
முந்தைய மெகா ஐபிஓக்களான பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா மற்றும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளுடன் ஒப்பிடும்போது ஜியோவின் வேகம் மிக அதிகமாக உள்ளது.
பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் முதல் நாள் பிற்பகல் 2 மணி அளவிலும், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் முதல் நாள் முடிவிலும் தான் முழுப் பங்குகளை எட்டின. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ஐபிஓ முதல் நாளில் வெறும் 18% மட்டுமே சந்தா பெறப்பட்டிருந்தது. ஆனால், அவைகளை விட பெரிய அளவிலான வெளியீடாக இருந்தபோதிலும், ஜியோ முற்பகல் அமர்விலேயே முழு பங்குகளையும் கடந்து சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களின் (QIB) பிரிவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலை 10:39 மணி நிலவரப்படி இப்பிரிவு 3.25 மடங்கு அதிகமாக சந்தா பெறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கட்டங்களில் நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையானது ஏலமாக ஈர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சில்லறை முதலீட்டாளர் (RII) பிரிவு 0.25 மடங்கும், நிறுவன சாரா முதலீட்டாளர் (NII) பிரிவு 0.26 மடங்கும் ஆரம்ப கட்டத்தில் பங்குகளைப் பெற்றுள்ளன. மேலும், பணியாளர்கள் பிரிவு 0.59 மடங்கும், பங்குதாரர்களின் பிரிவு 0.45 மடங்கும் சந்தா பெறப்பட்டுள்ளன.
மற்ற முன்னணி நிறுவனங்களின் ஐபிஓக்கள் பெரும்பாலும் ‘பங்கு விற்பனை’ (OFS) முறையில் மட்டுமே அமைந்திருந்த நிலையில், ஜியோ பிளாட்பார்ம்ஸின் இந்த ஐபிஓ முழுக்க முழுக்க புதிய பங்குகளை வெளியிடும் (Fresh Issue) முறையாகும். இதன் மூலம் திரட்டப்படும் ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகையும் நேரடியாக நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் மூலதனத்திற்கும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஜிஎம்பி (GMP) பிரீமியம் ஏறக்குறைய 22% முதல் 25% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

