மலாக்கா மாநிலத் தேர்தலில் ‘முன்னிலை வேட்பாளர்'(முதல்வர் வேட்பாளராக) ஒருவரை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பதவி, அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சியைச் சேர்ந்தவருக்கே வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ‘உத்துசான் மலேசியா’செய்தி நிறுவனத்தின் தகவல்படி, மக்களின் ஆணையைப் பெறுவதிலேயே பாஸ் கட்சி கவனம் செலுத்துவதாக துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
‘முன்னிலை வேட்பாளர்’ குறித்த விவகாரம் சில நேரங்களில் வேண்டுமென்றே சர்ச்சையாக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், தலைவர்களை அவர்களின் புகழ் அல்லது பிரபலத்தை வைத்துத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும், அவர்களின் திறன் மற்றும் பொருத்தப்பாட்டின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார். உதாரணமாக, இதற்கு முன்பு திரெங்கானு மாநில முதலமைச்சர் அகமது சம்சூரி மொக்தாரை யாருக்குத் தெரியும்? அதேபோல், கெடா மாநில முதலமைச்சர் சனுசி நோரை யாருக்குத் தெரியும்?”
அவர்களின் பெயர்கள் முன்னதாக அவ்வளவாக அறியப்படவில்லை. இதிலிருந்து, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவரது புகழ் அல்லது பிரபலத்தை மட்டும் பார்க்காமல், அவரது திறன் மற்றும் பொருத்தப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது,என்று அவர் கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மற்றொரு கட்சியைச் சேர்ந்த ஒருவரை ‘முன்னிலை வேட்பாளராக’ பாஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டதற்கு, இது குறித்து தாங்கள் இணைந்து செயல்படும் கட்சிகளுடன் கலந்துரையாடப்படும் என்று துவான் இப்ராகிம் பதிலளித்தார். மலாக்கா தேர்தலில் ‘முதல்வர் வேட்பாளர்’ ஒருவரை முன்னிறுத்துவது குறித்து, கட்சியின் கூட்டு முடிவின் அடிப்படையில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.” தற்போதைய நிலையில், ‘முன்னிலை வேட்பாளர்’ குறித்த கேள்வியை விட, தேர்தல் கொள்கை அறிக்கையே எங்களுக்கு முன்னுரிமையானது என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணையம், நவம்பர் 14ஆம் தேதியை வாக்குப்பதிவு நாளாக அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிக்கும் நிகழ்வு நவம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது. மாநிலச் சட்டமன்றத்தின் மொத்தம் 28 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாரிசான் நேஷனல் 21 இடங்களையும், பக்காத்தான் ஹராப்பான் 5 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.



