ராமேஸ்வரம் விமான நிலையம்: மும்முரம் காட்டும் தமிழக அரசு..! முதல் அடி எடுத்து வச்சாச்சு..!!
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர். ராமநாதபுர சாமி கோவில், ராமேஸ்வரம் கடல், பாம்பன் பாலம் என ஏராளமான இடங்களை காண மக்கள் வருகின்றனர்.
சுற்றுலாவை அடிப்படையாக கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இத்திட்டத்திற்கான தள அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கநேரி பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், மொத்தம் ஐந்து சாத்தியமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதியில் மாணிக்கநேரி பகுதி இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ,தமிழக அரசின் சார்பில் இந்த விமான நிலைய மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து சென்று வருகிறது. உலக புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ஆன்மீக பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
தற்போது இந்த பகுதிக்கு செல்ல சாலை மற்றும் இரயில் வழி போக்குவரத்தை மட்டுமே மக்கள் நம்பியுள்ளனர். புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் பயண நேரம் கணிசமாக குறையும் என்றும், இப்பகுதிக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதி மிகவும் எளிதாகும் என்றும் தமிழக அரசு எதிர்பார்க்கிறது. இது இன்னும் சுற்றுலாவை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என்றும் நம்புகிறது.
விமான நிலைய கட்டுமான பணிகளில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து தள அனுமதி பெறுவது முதல் படியாகும். இந்த ஒப்புதலுக்கு பிறகு, கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக கட்டமைப்பு சார்ந்த கொள்கை ஒப்புதல்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ அனுமதிகளையும் இத்திட்டம் பெற வேண்டியிருக்கும்.
இது முடிந்த உடன் ஒப்பந்த புள்ளி கோரி விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்கும். ராமேஸ்வரம் விமான நிலைய அமைந்தால் அது சார்ந்து பல வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பதால் ராமேஸ்வரம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

