Last Updated:
தேர்வுக்குழு முன்னாள் தலைவர் அஜித் அகர்கரின் பங்களிப்பை அகில இந்திய கிரிக்கெட் வாரியம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக பிரக்யான் ஓஜா அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வீரர் ரமேஷ் பவார் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) திங்கள்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா (Pragyan Ojha) ஆண்கள் தேர்வு குழுவின் புதிய தலைவராக (Chief Selector) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இடைக்கால தேர்வாளராக பணியாற்றி வந்த அவர், தற்போது முழுநேரத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்சபே அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) இந்தத் தேர்வுப் பணியை மேற்கொண்டது. அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதன் அடிப்படையில் சீனியாரிட்டி அடிப்படையில் பிரக்யான் ஓஜா இந்தத் தலைவர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய தேர்வுக்குழுவில் பிரக்யான் ஓஜா தலைவராகச் செயல்படவுள்ள நிலையில், சிவ சுந்தர் தாஸ், ஆர்.பி. சிங், அஜய் ராத்ரா ஆகியோருடன் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் ரமேஷ் பவார் (Ramesh Powar) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இந்த ஐந்து பேர் கொண்ட குழு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணியை முழுமையாகக் கவனிக்கும். புதிதாக இணைந்த ரமேஷ் பவார், 2004 முதல் 2007 வரை இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், அவர் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி ஆசிய கோப்பை மற்றும் காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதுடன், மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கும் கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ள பெரும் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்குழு முன்னாள் தலைவர் அஜித் அகர்கரின் பங்களிப்பை அகில இந்திய கிரிக்கெட் வாரியம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.
கடந்த 2023 ஜூலை மாதம் பொறுப்பேற்ற அஜித் அகர்கர் தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகள், இரண்டு ஆசிய கோப்பை பட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான ஆசிய விளையாட்டுத் தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


