Last Updated:
நிதி மற்றும் அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கவும் இக்கூட்டம் வழிவகுக்கும்.
தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷான்பேயில் அக்டோபர் 19 நாளை மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசு தலைவர்கள் கவுன்சிலின் (Council of Heads of Government – CHG) 25-வது மாநாட்டில், இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளார்.
தஜிகிஸ்தான் நாட்டின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த மாநாடானது SCO உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, பிராந்திய இணைப்பு, கண்டுபிடிப்புகள் மற்றும் கலாச்சார-மனிதநேய பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், அமைப்பில் தற்போது நடைமுறையிலுள்ள கூட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நிதி மற்றும் அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கவும் இக்கூட்டம் வழிவகுக்கும்.
தொழில் தொடக்க நிறுவனங்கள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் இந்தியா தொடர்ந்து தீவிரமாகப் பங்காற்றி வருகிறது.
அந்த வகையில், SCO அமைப்பின் மூலம் பரஸ்பர பலன் தரும் நடைமுறை ஒத்துழைப்புகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து பிற உறுப்பு நாடுகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இந்த மாநாடு இந்தியாவிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இதற்கு முன்னதாக 2025 நவம்பர் 18 அன்று ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற 24-வது CHG மாநாட்டில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


