நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறதா மத்திய அரசு?
ஈரான் போரும் , கச்சா எண்ணெய் விநியோக பிரச்சினையும் தீராமல் இருக்கும் நிலையில் இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸின் முன்னணி பொருளாதார நிபுணர் அலெக்ஸாண்ட்ரா ஹெர்மன் பிரசாத் எழுதியுள்ள கட்டுரையில் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இந்தியாவின் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதற்கு முன்பு பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்துவதற்கு நவம்பர் மாதமே கடைசி மற்றும் யதார்த்தமான தருணமாக இருக்கும் என அலெக்ஸாண்ட்ரா ஹெர்மன் பிரசாத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடையும் முன்பே பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் மாதத்தை அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பெரிய அளவில் இல்லாமல் ஒரு மிதமான அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என ஹெர்மன் பிரசாத் கணித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டால், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் சில்லறை பணவீக்கம் 6.2% ஆகவும், 2027 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 6.5% ஆகவும் அதிகரிக்கக்கூடும் என ஹெர்மன் பிரசாத் எச்சரித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி 5.2% ஆக மதிப்பிட்டுள்ள நிலையில், ஹெர்மன் பிரசாத் இதனை 5.4% ஆக கணித்துள்ளார். மேலும் நிலைமையை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி மேலும் ரெப்போ வட்டியை உயர்த்தும் என கூறியுள்ளார்.
ஈரான் போர் தொடங்கியது முதலே இந்தியாவுக்கு தலைவலி தான். கச்சா எண்ணெய் சப்ளை நின்று போனதால் வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், எல்பிஜி ஆகியவற்றை வாங்கி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த முடியவில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேரடியாகவே கோடிக்கணக்கான மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் மே மாதம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

