EPFO வாட்ஸ்அப் சேனல்: பிஎஃப் சந்தாதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான EPFO சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், தங்களின் முதலீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், EPFO அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஒரு வாட்ஸ்அப் சேனலை தொடங்கியுள்ளது. இதில் என்ன சேவைகள் நமக்கு கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம்.
வாட்ஸ் அப் சேனல் மூலம் PF , EPS அதாவது ஓய்வூதியத் திட்டம் மற்றும் EDLI எனப்படும் ஊழியர்களின் வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அனைத்து புதிய அறிவிப்புகள் உடனுக்குடனே பகிரப்படும். அது மட்டுமில்லாமல் பிஎஃப் பணத்தை ஆன்லைனில் முன்பணமாக எடுப்பது எப்படி, க்ளெய்ம் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்பது போன்ற செயல்முறை விளக்க வீடியோக்கள் மற்றும் வழிகாட்டிகள் வாட்ஸ் அப் சேனல்கள் மூலம் கிடைக்கும்.

தற்போதைய நிலவரப்படி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த சேனலில் இணைந்துள்ளனர். இந்த வாட்ஸ்அப் சேனல் முழுக்க முழுக்க தகவல் மற்றும் விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என ஈபிஎஃப்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சேனல் மட்டுமே எந்த ஒரு பிஎஃப் சேவையும் கிடைக்காது என விளக்கம் தந்துள்ளது.
அதாவது இந்த சேனல் மூலம் உங்களின் தனிப்பட்ட பிஎஃப் கணக்கின் இருப்பை சரிபார்க்கவோ, ஆன்லைனில் புதிய பிஎஃப் கிளைம்களை சமர்ப்பிக்கவோ, கிளைம் ஸ்டேட்ஸ்களை சரிபார்க்கவோ முடியாது. உங்களின் நிதி சார்ந்த அனைத்து சேவைகளையும் எப்போதும் போல ஈபிஎஃஓ அதிகாரப்பூர்வ போர்டல் அல்லது UMANG App ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்திற்கு செல்லலாம்.
பிஎஃப் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உடனுக்குடன் பெற இந்த வாட்ஸ் அப் சேனல் பயன்படும். இது ஒரு ஓபன் சேனல் என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த சேனலைப் பின்தொடர்ந்து தகவல்களை பெற்று கொள்ளலாம். இதில் இணைவதற்கு உங்களின் UAN எண் , பாஸ்வேர்டு போன்ற எந்தவொரு ரகசிய தகவல்களையும் வழங்க வேண்டிய தேவையில்லை.
இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் இணைய வாட்ஸ் அப் சென்று Channels என்ற பகுதிக்கு அருகில் உள்ள ‘+’ (Explore) ஐகானை கிளிக் செய்ய வேண்டும், பின்னர் EPFO என டைப் செய்து தேட வேண்டும். ஈபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ மற்றும் ப்ளூ டிக் குறியிடப்பட்ட சேனலை Follow செய்தால் போதும்.
