மலேசியத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு (பெர்கேசோ) வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, மனிதவள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து ‘Lindung 24 Jam’ (பணி சாரா விபத்துத் திட்டம்) எனும் விரிவான புதிய திட்டம் மலேசியச் சமூகப் பாதுகாப்பில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. வேலை நேரம் முடிந்த பிறகும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் நாட்டின் எல்லைக்குள் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் முழுமையான விபத்துப் பாதுகாப்பை உறுதிசெய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.


பணியாளர் சமூகப் பாதுகாப்பு சட்டம் 1969 (சட்டம் 4)-இன் கீழ் இதுவரை நடைமுறையில் இருந்துவரும் ‘வேலைவிபத்துகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம்’, பணி நேரத்திலும் வேலைக்குச் சென்று வரும் வழியிலும் ஏற்படும் விபத்துகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கி வந்தது.ஆனால், பெரும்பாலான தொழிலாளர்கள் பணி நேரத்திற்குப் பின்னரே விபத்துகளில் சிக்குகின்றனர் என்பதை உணர்ந்து இப்புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.வீடு, உடற்பயிற்சி, ஓய்வுநேரப் பொழுதுபோக்குகள் அல்லது தனிப்பட்ட பயணங்களின்போது எதிர்பாராமல் விபத்துகள் நேரிட்டாலும், தொழிலாளர்கள் முறையான மருத்துவச் சிகிச்சையையும் நிதிப் பாதுகாப்பையும் பெறுவதை ‘Lindung 24 Jam’ சாத்தியமாக்கியுள்ளது.எனினும், வழக்கமான அல்லது நாள்பட்ட நோய்கள், வெளிநாடுகளில் நிகழும் விபத்துகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


உத்தியோகபூர்வ கூற்றுகளும் அரசு முடிவுகளும்:
முன்னதாக, கடந்த ஜூலை 9, 2026 அன்று ஊடகம் வழி அறிக்கை வெளியிட்ட மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பொதுமக்களின் கருத்துகளைப் பரிசீலித்த அமைச்சரவையின் முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.அதன்படி, உள்ளூர் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் கட்டாயமல்ல என்றும், அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இதில் பங்களிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.அதே வேளையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் சந்தா செலுத்தும் கட்டாய நடைமுறை சட்ட விதிகளின்படி தொடர்ந்து நீடிக்கிறது எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதனிடையே, முன்னதாக கடந்த செப்டம்பர் 9, 2026 அன்று ஊடகம் வழி கருத்து தெரிவித்திருந்த பெர்கேசோ குழுமத் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் முகமது, “விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்ற யதார்த்தத்தை உணர்ந்து, சுமார் 85 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் தொடர்ந்து இணைந்திருப்பது இதன் மீதான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,” என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
சமூக-பொருளாதாரத் தாக்கம், சந்தா விவரம்:
இத்திட்டம் குறிப்பாக B40, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு வலுவானதொரு பொருளாதாரக் கேடயமாக உருவெடுத்துள்ளது.உள்ளூர் தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து தொடக்கத்தில் 0.75 விழுக்காடு என்ற விகிதத்தில் (படிப்படியாக 1.0 விழுக்காடு, 1.25 விழுக்காடு என உயரும்) மிகக் குறைந்த சந்தாவைச் செலுத்துவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை, தற்காலிக, நிரந்தர இயலாமைக்கான இழப்பீடு, மாதம் 500 ரிங்கிட் தொடர் கவனிப்புப் படி, 3,000 ரிங்கிட் ஈமச்சடங்குச் சலுகை, தொழில்சார் மறுவாழ்வுச் சலுகைகளைப் பெற முடிகிறது.குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபர் வேலைக்கு அப்பாற்பட்ட நேரத்தில் விபத்தில் சிக்கினாலும், குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்படாமல் இத்திட்டம் பாதுகாக்கிறது.
பயனர்களின் குரல்:
‘Lindung 24 Jam’ திட்டத்தின் மூலம் பயனடைந்த மூன்று பெண்கள், இத்திட்டம் தங்களுக்கு எவ்வாறு உதவியாக இருந்தது என்பதைப் பகிர்ந்துகொண்டனர். எதிர்பாராத விபத்துகள் அல்லது வேலை செய்ய முடியாத சூழ்நிலைகள் ஏற்படும்போது, மருத்துவச் செலவுகள், அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதில் இந்த திட்டம் வழங்கும் உதவிகள் பெரும் ஆதரவாக இருக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.குறிப்பாக, நெருக்கடியான காலகட்டத்தில் நிதிப் பாதுகாப்பு கிடைப்பது பயனர்களின் குடும்பத்தினருக்கும் மனநிம்மதியை அளிக்கும் என குறிப்பிட்ட அவர்கள், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.


அச்சு ஊடகத்தின் தட்டச்சுப் பிரிவுப் பணியாளர் நிர்மலா செல்வம் கூறுகையில், “குறைந்த மாதாந்திரச் சந்தாவில் வேலைக்கு அப்பாற்பட்ட நேரங்களிலும் சிகிச்சை, இழப்பீடு உத்தரவாதமாவது உழைக்கும் வர்க்கத்திற்குக் கிடைத்த பெரும் வரம்,” என்றார்.


வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகும் பாதுகாப்பு கிடைக்கும் என்ற எண்ணமே நிம்மதியைத் தருகிறது; குடும்பத்திற்கு இது சிறந்த நிதிப் பாதுகாப்பு,” என்கிறார் தட்டச்சுப் பணியாளர் கோமலா பெருமாள்.


“விபத்துக்கள் நேரத்தைப் பார்த்து வருவதில்லை. ஆதலால், விடுமுறை நாட்களிலும் பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் துணை நிற்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது,” என அச்சு ஊடகத்தின் பக்க வடிவமைப்புப் பணியாளர் சாந்தா கிருஷ்ணன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
தொழிலாளர் நலனில் அனைத்துலகத் தரம்:
தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத் தூண்கள்; அவர்களின் பாதுகாப்பு பணிபுரியும் நேரத்துடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது.உள்ளூர் தொழிலாளர்களுக்குத் தங்களின் தேவைக்கேற்ப சுயமாக முடிவெடுக்கும் உரிமையை வழங்கி, பணி சாரா நேரங்களிலும் சமூகப் பாதுகாப்புக் குடையை விரித்துள்ளதன் மூலம், மலேசியாவின் தொழிலாளர் நலக் கட்டமைப்பு அனைத்துலகத் தரத்திற்கு மேலும் ஒரு படி உயர்ந்துள்ளது பெர்கேசோவின் ‘Lindung 24 Jam’ திட்டம்.
ராமேஸ்வரி ராஜா



