International
oi-Hema Vandhana
பெய்ஜிங்: 101 வயதிலும் கோகோ கோலா, ஸ்பிரைட் என ஜாலியாக கூல் டிரிங்ஸ் குடித்துக்கொண்டு, ஒரு தட்டு நிறைய நண்டை அள்ளி அள்ளி சாப்பிடும் தாத்தாவை பார்த்திருக்கிறீர்களா? சீனாவை சேர்ந்த லூ ஷிஸெங் என்ற இந்த தாத்தாவின் வித்தியாசமான உணவு பழக்கம்தான் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.. இப்படியும் ஒரு முதியவர் நம்முடன் வாழ்ந்து வருகிறாரா? என்று நெட்டிசன்கள் வியப்பில் உள்ளனர்.
பொதுவாக வயதானவர்கள் என்றாலே சாப்பாட்டில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நினைப்போம்.. ஆனால், லூ ஷிஸெங் என்ற இந்த முதியவரின் விஷயத்தில் அப்படியில்லை.. அதே நேரத்தில், அவர் பின்பற்றும் இன்னொரு பழக்கம்தான் கவனிக்க வேண்டிய விஷயம்

அதுமட்டுமல்ல, சர்க்கரை அதிகமுள்ள கூல் டிரிங்ஸ்களை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அட்வைஸ் தருவார்கள்.. ஆனால், 101 வயதான லூ ஷிஸெங் முக்கிய சாப்பாடே கோகோ கோலா, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள்தானாம்.. அதிலும் குளிர்ந்த ஸ்பிரைட்டில் சில துளிகள் ஒயிட் ஒயின் கலந்து குடிப்பது அவருடைய வித்தியாசமான பழக்கங்களில் ஒன்று
101 வயது தாத்தா – தட்டு நிறைய நண்டு
சாப்பாட்டில் நண்டு, மீன், இறால், பன்றி இறைச்சி என பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்.. ஒருவேளைக்கு அரை கிண்ணம் சாதத்துடன் ஒரு தட்டு நிறைய நண்டு சாப்பிடுவதும் அவருடைய உணவு பழக்கங்களில் ஒன்று.. தர்பூசணி, பேரிக்காய், கமலா ஆரஞ்சு போன்ற பழங்களையும் விரும்பி சாப்பிடுகிறார்
இப்படி தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு வரும் இவர், 101 வயதை எட்டியிருப்பதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.. ஆனால், அவர் சாப்பிடும் உணவுகளை மட்டுமே நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்று சொல்லிவிட முடியாது
படுக்கையிலேயே உடற்பயிற்சி
லூ ஷிஸெங்கின் அன்றாட வாழ்க்கையே வித்தியாசமானது.. அதிகாலை 4 மணிக்கே விழித்துக்கொள்கிறார்.. ஆனால், உடனே படுக்கையில் இருந்து எழுந்துவிடுவதில்லை.. படுக்கையிலேயே உடலை நீட்டி மடக்குவது உள்ளிட்ட சின்னி சினன் பயிற்சிகளை சுமார் 2 மணி நேரம் செய்கிறார்.. அதன்பிறகுதான் காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுகிறார்
அதேபோல், நைட் சாப்பாட்டையும் சீக்கிரமாகவே முடித்துவிடுகிறார்.. மாலை 5 மணிக்கே இரவு உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு, இரவு 8 மணிக்கு தூங்கச் சென்றுவிடுகிறார்.. அதிகாலையில் விழிப்பது, படுக்கையிலேயே உடற்பயிற்சி செய்வது, சீக்கிரமாக சாப்பிட்டு உறங்குவது என அவருடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேர ஒழுங்கு இருக்கிறது
தள்ளுவண்டியில் மார்க்கெட்
லூ ஷிஸெங் வயதான பிறகும் தன்னால் முடிந்த வேலைகளை தானே செய்துகொண்டு வந்துள்ளார்.. தனக்கு தேவையான காய்கறிகளை, மார்க்கெட்டு போய் இவரே வாங்கி வருவாராம். தள்ளுவண்டியில் சென்று , தனக்கு பிடித்த மீன், நண்டு போன்ற கடல் உணவுகளை பார்த்து பார்த்து வாங்கி வருவாராம்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, கீழே தடுக்கி விழுந்து விட்டார்.. அப்போது முதல் தனியாக மார்க்கெட்டுக்கு போக முடிவதில்லையாம். அதனால் குடும்பத்தினர் இவருக்கு உதவியாக ஒருவரை நியமித்துள்ளனர்.. இந்த தாத்தாவுக்கு 2 மகன்கள் உள்ளனர்.. 2 பேருமே வேலைக்கு செல்வதால், அப்பாவை பார்த்துக்கொள்ள உதவியாளரை நியமித்துள்ளார்கள்.
முதியோர் உதவித்தொகை
எனினும் தன்னுடைய உடல்நிலையை, இந்த தாத்தா பத்திரமாக பார்த்து கொள்கிறார்.. சளி அதிகம் பிடிக்காதாம்.. இப்போதுவரை நினைவாற்றல் நன்றாக உள்ளதாக லூ ஷிஸெங் சொல்கிறார்..
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் 100 வயதை கடந்தவர்களுக்கு மாதம் 800 யுவான் முதியோர் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.. இது நம்ம ஊர் மதிப்பில் சுமார் ரூ.11,000 ஆகும்.. முதியவர்களின் தேவைகளுக்கு உதவும் வகையில் இந்த தொகை வழங்கப்படுகிறது.. இந்த பணத்தையும் தாத்தா வாங்கி, தன் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்கிறார்.
இதுதான் அந்த சீக்ரெட்?
கோக், ஸ்பிரைட் குடிப்பது, நண்டு சாப்பிடுவது என லூ ஷிஸெங்கின் உணவு பழக்கங்கள் வித்தியாசமாக இருந்தாலும், 101 வயது வரை வாழ்வதற்கு இதெல்லாம்தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது.. ஒருவருடைய ஆயுளில் மரபியல், உடல்நிலை, உடல் இயக்கம், உணவு பழக்கம், வாழ்க்கை சூழல் போன்றவையே இதற்கெல்லாம் காரணிகளாக அமையும்.
இருந்தாலும், தனக்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு, தன் விருப்ப முறையில் வாழ்ந்து வரும் இந்த 101 வயது சீன தாத்தாவின் கதை, நிஜமாகவே சுவாரஸ்யமானதுதான்..!!!

