முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக மொத்தம் 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபாயைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதெஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேராவின் கேள்விகளுக்குப் பதிலளித்த கடற்படை அதிகாரி தம்மிக பிரியதர்ஷன விக்கிரமாராச்சி, யோஷித ராஜபக்ஷ 2006ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி வரை கடற்படையில் லெப்டினன்ட் பதவியில் பணியாற்றியதாகத் தெரிவித்தார்.
அவரது மாதாந்தச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் மொத்தத் தொகை 16,500 ரூபாயாக இருந்ததாகவும், அதில் 110 ரூபாய் கழிக்கப்பட்ட பின்னர் 16,390 ரூபாய் கிடைத்ததாகவும் சாட்சியமளிக்கப்பட்டது.
மற்றொரு கடற்படை அதிகாரியான நுவன் துஷார, குறித்த 10 ஆண்டு காலப்பகுதியில் யோஷித ராஜபக்ஷ மொத்தமாக 51,50,626 ரூபாயைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாகப் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், 2004ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி, அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இளம் அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்காக யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவுக்கு அனுப்ப நிதியுதவி கோரி பாதுகாப்பு அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளுக்காக 4,174.80 பிரித்தானிய பவுண்டுகளும், பயிற்சிக் கட்டணமாக 20,362 ரூபாயும் கோரப்பட்டதாகச் சாட்சியமளிக்கப்பட்டது.
வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் சாட்சியம்
தேசிய சேமிப்பு வங்கியின் இளநிலை நிறைவேற்று அதிகாரி கனிஷ்க காமினி, யோஷித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகள் தொடர்பில் சாட்சியமளித்தார்.
2003ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, 72,470.03 ரூபாய் ஆரம்ப வைப்புடன் அவர் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் திறந்ததாகவும், பின்னர் வட்டியுடன் அதன் இருப்புத் தொகை 489,411.70 ரூபாயாக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சேமிப்புக் கணக்கில் பல வைப்புகள் செய்யப்பட்டதாகவும், 2016ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதியே முதல் பண மீளப்பெறல் இடம்பெற்றதாகவும் வங்கி அதிகாரி தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, அரச தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் தொடர்பில் பிரதிவாதி தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆட்சேபனை தெரிவித்தார். குறித்த ஆவணம் விசாரணையின்போது பரிசீலிக்கப்படவில்லை என்றும், குற்றப்பத்திரிகையுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெய்ஸி ஃபாரஸ்டின் சொத்துகள் தொடர்பிலும் விசாரணை
நுகேகொடை மாவட்ட நீதிமன்றப் பதிவாளரின் சார்பில் சாட்சியமளித்த நீதிமன்றப் பதிவாளர் சேனரத் பண்டார, டெய்ஸி ஃபாரஸ்ட் என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துகள் தொடர்பான வழக்கு குறித்து விளக்கமளித்தார்.
2017ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி, அப்போதைய நுகேகொடை மாவட்ட நீதிபதி சஹான் மாபா, டெய்ஸி ஃபாரஸ்டின் சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பில் உத்தரவு பிறப்பித்ததாக அவர் தெரிவித்தார். அந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதி சொத்து நிர்வாகியாகவும், இரண்டாவது பிரதிவாதி அவருக்குப் பாதுகாவலராகவும் நியமிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
டெய்ஸி ஃபாரஸ்டுக்கு மறதி நோய் மற்றும் அல்சைமர் நோய் இருப்பதாகக் கூறப்பட்டபோதிலும், அவரது உடல்நிலை குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்ததாகப் பதிவுகளில் குறிப்பு இல்லை என்றும், அவரது அசையும், அசையா சொத்துகள் மற்றும் நிதிச் சொத்துகள் தொடர்பான விபரப்பட்டியலும் பதிவுகளில் காணப்படவில்லை என்றும் சாட்சியமளிக்கப்பட்டது.
இதற்கிடையில், சிஎஸ்என் தொலைக்காட்சி அலைவரிசைக்காக இறக்குமதி செய்யப்பட்ட ஒளிபரப்பு வாகனத்தைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு உதவியதாக வர்த்தகர் மெர்வின் அமரவீர நீதிமன்றத்தில் தெரிவித்தார். ரோஹன் வெலிவிட்டவின் வேண்டுகோளின் பேரில், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தன்மை மற்றும் பெறுமதி தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். அத்துடன், ரோஹன் வெலிவிட்டவுக்கும் சிஎஸ்என் தொலைக்காட்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் தனக்குத் தெரியாது எனச் சாட்சியமளித்தார்.
ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணையை ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், எஞ்சிய அரச தரப்பு சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார்.
தேஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐந்து காணிகளை வாங்கியதன் மூலம் பணமோசடி குற்றம் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


