பீரோவில் தூங்கும் பழைய தங்க நகைக்கு ஏகப்பட்ட மவுசு .. நகை கடைகள் சொல்லும் முக்கிய ‘மெசேஜ்’..!
இந்திய மக்கள் மத்தியிலும், இந்திய நகை கடைகளிலும் எக்கச்சக்கமான மாற்றங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால் சமானிய மக்கள் மிகவும் எச்சரிக்கையாகத் தங்க நகைகளை வாங்க துவங்கியுள்ளனர். ஏன் அதிரடி மாற்றம்..?
2024ஆம் ஆண்டு இதே அக்டோபர் 15ஆம் தேதி 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை வெறும் 7740 ரூபாய். ஆனால் 2 வருடத்தில் 2026 அக்டோபர் 15ஆம் தேதி 14,744 ரூபாய். இந்த 2 வருடத்தில் இடைவெளியில் ஒரு மல்டிபேக்கர் பங்குகளுக்கு இணையாக சுமார் 90.49 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமாயின் 2 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய்க்கு தங்க வகை வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு 1,90,000 ரூபாய்.

இந்தியாவில் தங்கம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு சேமிப்பு கருவியாக மாறியுள்ளது, குறிப்பாக கொரோனாவுக்கு பின்பு தென்னிந்தியாவைப் போலவே வட இந்திய மிடில் கிளாஸ் மக்கள் மத்தியிலும் தங்கத்தை முக்கிய சேமிக்கப்பாக பார்க்க துவங்கியதால் அதிகப்படியான மக்கள் தங்கத்தை வாங்கத் துவங்கினர்.
இப்படி இந்தியா முழுவதும் டிமாண்ட் அதிகமாகியிருக்கும் வேளையில் இத்தகைய 90 சதவீத விலை உயர்வு எந்தொரு மிடில் கிளாஸ் மக்களாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் புதிய தங்க நகை வாங்கும் போது பணம் கொடுத்து வாங்காமல் பீரோவில் தூங்கும் பழைய தங்க நகையைக் கொடுத்து வாங்கத் துவங்கியுள்ளனர்.
அட இதுல என்ன புதுசா இருக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது, காலம் காலமாக பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்குவது வழக்கமான ஒரு விஷயமாக இருந்தாலும் அளவு என்பது மிகவும் முக்கியம்.
ஆம், தங்கம் விலை 90 சதவீதம் உயர்ந்த பின்பு நாட்டின் முன்னணி நகைக் கடைகளில் பழைய தங்கத்தின் வருகை 20-30 சதவீதத்தில் இருந்து சுமார் 70 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் கிரிசில் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நகை கடைகளின் மொத்த வருவாயில் பழைய தங்கத்தின் பங்கு சுமார் 40 சதவீதம் என அறிவித்துள்ளது.
மேலும் ஜோய் அலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகஸ்ட் மாதம் கூறுகையில் சுமார் 73 சதவீத வருவாய் பழைய தங்கத்தின் மூலம் வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதேபோல் தனிஷ்க் 50 சதவீதம், கல்யாண் ஜூவல்லர்ஸ் 46- 55 சதவீதம், வட இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் சென்கோ கோல்டு அண்ட் டைமெண்ட்ஸ் 50 சதவீதம் மேல் பழைய தங்கத்தின் மூலமாகவே பெரும்பாலான வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் பழைய தங்கத்தைக் கொண்டு புதிய நகைகளை வாங்கும் போது சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
1. பழைய தங்கத்தை நகை கடைக்கு கொண்டு செல்லும் முன் அதன் உண்மையான மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள். இதேபோல் உங்களுடைய நகையின் தூய்மையை முழுமையாக தெந்துக்கொள்ள அருகில் இருக்கும் நகை கடையில் கேரட் மீட்டர் கொண்டு உங்கள் கண் முன்பே அளவிடவும். இதன் மூலம் உங்களுடைய தங்க நகையில் தூய்மை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
2. பொதுவாக நகைக் கடைகள் பழைய தங்க நகைகளை வாங்கும் போது 5-10 சதவீதம் வரையில் குறைத்தே மதிப்பீட்டைக் கொடுப்பார்கள், இதை இதைத் தவிர்க்கப் பழைய நகைளை உருக்கி அதன் தூய்மையை உறுதி செய்யலாம். அல்லது தற்போது சந்தைக்கு அதிகளவிலான பழைய நகைகள் வரும் காரணத்தால் பல முன்னணி நகைக் கடைகள் எடைக்கு எடை, தூய்மை அளவுக்குக் கணக்கிட்டு எவ்விதமான கழிப்பும் இல்லாமல் எடுத்துக்கொள்கிறது. இதனால் இத்தகைய கடையைத் தேர்வு செய்யவும்.
3. மேலும் பழைய நகையை உருக்கி அதன் தூய்மையைக் கண்டறிய handling, melting, de-alloying என பல பெயரில் கட்டணத்தை வசூலிக்கக் கூடும். இதை தவிர்க்க தனிஷ்க் போன்ற முன்னணி நகைக் கடைகள் இலவசமாக இச்சேவையை வழங்குகிறது.
4. மேலும் சில பிரத்தியேகமான நகைக் கடைகள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பழைய தங்கத்தை மாற்றுவோருக்கு புதிய தங்க நகையில் 1 சதவீதம் தள்ளுபடியைக் கொடுக்கிறது. இதைக் கவனித்தாலும் லாபம் பெற முடியும்.

