
ஜெர்மனியின் கொலோன் நகரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ரோபோவை பறிமுதல் செய்துள்ள பொலிஸார், இரு இளைஞர்களைக் கண்காணித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெர்மனியின் கொலோன் நகரில் 16 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, ரோபோ ஒன்றை அந்நாட்டுப் பொலிஸார் பறிமுதல் செய்து, தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நகரின் மையப் பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றின் முன்பாக கடந்த சனிக்கிழமை, ஒக்டோபர் 10ஆம் திகதி இரவு இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி, தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தபோது, சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான சுமார் 120 சென்ரிமீட்டர் உயரமுள்ள ரோபோ ஒன்று பின்புறமாக வந்து, சிறுமியின் பின் பகுதியைத் தொட்டுத் தட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி அலறியடித்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவசர அழைப்புக் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கையில் 16 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் குறித்த ரோபோவை இயக்கியிருக்கலாம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், அந்த இளைஞர்கள் இந்தச் சம்பவத்தைச் சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பியதுடன், நடப்பவை குறித்து வர்ணனை செய்ததாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த 16 வயது சந்தேகநபருக்குச் சொந்தமான வாகனத்தின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ரோபோவையும், அவர்களிடமிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தச் செயல் மனிதரால் திட்டமிட்டு நேரடியாகக் கட்டுப்படுத்தப்பட்டதா அல்லது ஏற்கெனவே புரோகிராம் செய்யப்பட்டதன் விளைவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இக்குற்றத்துக்கு யார் பொறுப்பு என்பது குறித்து பொலிஸார் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

