Last Updated:
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது. சாய் ஹோப் சதம் அடித்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி பெங்களூருவில் நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை சமன் செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் 4வது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ருத்ர தாண்டவமாடினர்.
கேப்டன் ஷாய் ஹோப் 50 பந்துகளில் 102 ரன்களை குவித்தார். ரதர்ஃபோர்டு 26 பந்துகளில் 49 ரன்கள் சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இந்திய வீரர்கள் மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங் தலா 52 ரன்களை வாரி வழங்கினர். இதையடுத்து 248 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கம் தந்து அரை சதம் விளாசினார். எனினும் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் இந்திய அணி தடுமாறியது.
இறுதியில் திலக் வர்மாவும், நிதிஷ் குமார் ரெட்டியும் சற்று நம்பிக்கை அளித்தனர். திலக் வர்மா 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களில் வெளியேறிய நிலையில் இந்திய அணியின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதியில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேற்கு இந்திய தீவுகளின் கீமோ பால் 5விக்கெட்களை வீழ்த்தினார்.
24 ரன்களில் வென்ற மேற்கு இந்திய தீவுகள் தொடரை சமன் செய்துள்ளது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இறுதி போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


