
சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறும், சிவப்பு அறிவித்தல் பெறுமாறும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துகள் பிரிவுக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.
அத்துடன், சர்வதேச பொலிஸார் ஊடாக அவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு 2014ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதியை, அதன் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-ஷர்ட்டுகளைப் பெற்றுக் கொடுத்து அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துகள் பிரிவு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான், மேற்படிஉத்தரவைப் பிறப்பித்தார்.

