இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்ட போது, “இந்தியாவில் இணைய வசதி குறைவாக உள்ள மக்களும் ஸ்டார்லிங்க் சேவையால் பயனடைவர். அப்படிப்பட்ட இந்தச் சேவையைத் தடுப்பது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்” என்று குறிப்பிட்டார். அவருடைய அந்த வாதத்திற்கு, அந்நிறுவனத்தின் மாதக்கட்டணமே எதிரானதாக மாறி இருக்கிறது. இதுபற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்…
வங்கதேசத்துடன் ஓர் ஒப்பீடு: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், 2025 மே 20 முதல் ஸ்டார்லிங்க் சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ள மாதக் கட்டணமான ரூ.8,600 உடன் இதை ஒப்பிடும்போது, வங்கதேசத்தில் கட்டணம் கிட்டத்தட்ட பாதியாக உள்ளது. அதாவது வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் ரெசிடென்ஷியல் திட்டத்துக்கு மாதம் 6,000 டாக்காவும் (4,634 ரூபாய்), லைட் திட்டத்துக்கு 4,200 டாக்காவும் (3,243 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சரி, வங்கதேசத்தில் இந்தக் கட்டணம் மலிவானதாக இருக்கிறதே, அங்கு ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகமா என்று பார்த்தால், அங்குதான் ட்விஸ்ட். கட்டணம் குறைவென்றாலும், வங்கதேசத்தில் சேவை தொடங்கப்பட்ட நான்கு மாதங்களுக்குள் ஸ்டார்லிங்க் நிறுவனத்தால் 1,862 வாடிக்கையாளர்களை மட்டுமே பெற முடிந்தது. அவர்களில் 1,251 பேர் வீடுகளில் இருந்து சேவையைப் பயன்படுத்தியவர்கள் என்று Prothom Alo English செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல 2026 மார்ச் 31 நிலவரப்படி, அதாவது சேவை தொடங்கி எட்டு மாதங்களுக்குப் பிறகு, வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெறும் 3,500 ஆக இருந்தது என்று The Daily Star செய்தி தெரிவித்தது. 2026 மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 5,389 ஆக இருந்ததாக மற்றொரு செய்தி குறிப்பிட்டுள்ளது.
எலான் மஸ்க்
வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான BTRC, ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சந்தைப் பங்கு குறித்த அதிகாரப்பூர்வத் தரவுகளை இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தோராயமாக இதனை கணக்கிட முடியும். அதன்படி 2026 ஜூன் மாத இறுதியில், வங்கதேசத்தில் மொத்த இணையச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 135.94 மில்லியனாக இருந்தது. இதில் 120.84 மில்லியன் பேர் மொபைல் இணையத்தையும், 15.10 மில்லியன் பேர் நிலையான இணைய இணைப்புகளையும் பயன்படுத்தினர். வங்கதேசத்தில் ஜனவரி மாதத்தில் பதிவான ஸ்டார்லிங்க் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையான 3,469-ஐ அடிப்படையாகக் கொண்டால், மொத்த இணையச் சந்தாதாரர்களில் ஸ்டார்லிங்க் வாடிக்கையாளர்களின் பங்கு சுமார் 0.0026% மட்டுமே. நிலையான இணைய இணைப்புகளைப் பயன்படுத்துவோருடன் ஒப்பிடும்போது இது சுமார் 0.023% ஆகும். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்டார்லிங்க் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜனவரி மாதத்தையும், மொத்த இணையச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் மாதத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. எனவே, இந்தக் கணக்கீடுகள் தோராயமானவை மட்டுமே.
பிற நாடுகளின் நிலை என்ன? வங்கதேசம் மட்டுமல்ல, ஸ்டார்லிங்க்கின் ‘வீடுகளுகான மாதாந்திரத் திட்டக்கட்டணத்தை’ நைஜீரியா – கென்யா – கானா ஆகிய நாடுகளின் கட்டணத்துடன், இந்தியாவில் அது சுமார் 1.7 முதல் 2.3 மடங்கு அதிகமாக உள்ளது. அதே நேரம், இணையச் சேவைக்கான கருவித் தொகுப்பின் விலை மற்ற நாடுகளின் விலைக்கு நெருக்கமாக உள்ளது. இருப்பினும் இந்த நாடுகளிலும் ஸ்டார்லிங்க் வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர். காரணம், அவர்களின் தொகைக்கு அது அதிகச் செலவாக இருக்கிறது.
இந்தியாவில் விலை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? 2025 டிசம்பர் நிலவரப்படி, ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில், வீடுகளுக்கான மாதாந்திரத் திட்டக் கட்டணமாக ரூ. 8,600 தற்காலிகமாகக் காட்டப்பட்டது. மேலும், இணையச் சேவையைப் பெறுவதற்கான கருவித் தொகுப்பின் விலை ரூ. 34,000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் வயர்லெஸ் சேவையைப் பயன்படுத்தும் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் சராசரி மாத வருவாய் ரூ.196.04. இதனுடன் ஒப்பிடும்போது, ஸ்டார்லிங்கின் தற்காலிக மாதக் கட்டணமான ரூ.8,600 என்பது சுமார் 44 மடங்கு அதிகமாகும். இவையன்றில் ஸ்டார்லிங்க் சேவைக்காக ஒரு குடும்பம் முதல் ஆண்டில் ரூ.1,37,200 செலவிட வேண்டி இருக்கும். இதில் 12 மாதங்களுக்கான கட்டணமும், ரூ.34,000 மதிப்புள்ள கருவித் தொகுப்பும் அடங்கும். கருவித் தொகுப்பை வாங்குவதற்கான செலவு மட்டுமே, ஒரு சராசரி மொபைல் வாடிக்கையாளர் 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் செலவிடும் தொகைக்குச் சமமாகும்.
எலான் மஸ்க் – ஸ்டார்லிங்க் விவகாரம்
ஆனால் இந்தியாவில் உள்ள BSNL நிறுவனம், இதை மிக மிக குறைந்த விலையில் கொடுக்கிறது. கடந்த 2026 ஜனவரியில் BSNL நிறுவனம் 5,000 GB ஃபைபர் இணையத் திட்டத்தின் மாதக் கட்டணத்தை ரூ.799 ஆகக் குறைத்தது இங்கே கவனிக்கத்தக்கது. இது ஸ்டார்லிங்கின் தற்காலிகக் கட்டணத்தைவிட சுமார் 11 மடங்கு மலிவானது. எனினும், ஃபைபர் இணைய வசதி கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியும். 2026 மார்ச் மாதத் தரவுகளின்படி, கிராமப்புற இந்தியாவில் 440.87 மில்லியன் இணையச் சந்தாக்கள் இருந்தன. இது 100 பேருக்கு 48.31 இணையச் சந்தாக்கள் என்ற அளவாகும். நகர்ப்புற இந்தியாவில் 100 பேருக்கு 126.80 இணையச் சந்தாக்கள் இருந்தன. எனில், ‘ஸ்டார்லிங்க் சேவை ஃபைபர் இணைய வசதி இல்லாதவர்களுக்கும் கிடைக்குமே’ என்று இந்த இடத்தில் நமக்கு தோன்றலாம். ஆனால் அதற்கு, அங்கு இருப்பவர்களின் பொருளாதார நிலையே பதில்.
விலையை குறைக்குமா ஸ்டார்லிங்க்? இவையாவும் கேள்விக்குள்ளான போது ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் லாரன் ட்ரேயர், “இணையதளத்தில் காட்டப்பட்ட விலைகள் தொழில்நுட்ப அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் இடம்பெற்ற சோதனைத் தரவுகள். இந்தியாவுக்கான கட்டணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களிடமிருந்து முன்பதிவுகள் எதுவும் பெறப்படவில்லை” என்று கூறினார். இது ஸ்டார்லிங்க்கின் கட்டணம் குறையக்கூடும் என நம்பிக்கையை தந்தாலும், 2025-ல், மத்திய இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி கூறியதும் கவனம் தரவேண்டியதாக உள்ளது. அவர், “ஸ்டார்லிங்க் சேவைக்கான மாதக் கட்டணம் சுமார் ரூ.3,000 ஆக இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். அந்தக் கட்டணத்தைக்கூட இந்தியாவில் ஒரு சராசரி மொபைல் வாடிக்கையாளர் மாதந்தோறும் செலவிடும் தொகையுடன் ஒப்பிடும்போது சுமார் 15 மடங்கு அதிகமாகும்.

