CM Vijay: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பணவீக்கம்.. ஏன் இந்த மோசமான நிலை..? 3 முக்கிய காரணம்!
மத்திய அரசின் புள்ளியியல் துறை நேற்று வெளியிட்ட CPI மற்றும் பணவீக்க தரவுகள் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், இந்தியாவிலேயே அதிகப்படியான ரீடைல் பணவீக்கத்தைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடும், யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் மொத்த நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 2 வருட உச்ச அளவான 5.54 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 6.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் புதுச்சேரியின் ரீடைல் பணவீக்கம் 6.86 சதவீதமாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மேலும் 50 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாட்டுக்குப் பின் 6.70 சதவீதத்துடன் ஒடிசா, 6.68 சதவீதத்துடன் மத்தியப் பிரதேசம் ஆகியவை உள்ளது. இதை தொடர்ந்து தெலுங்கான (6.64%), ஆந்திரா (6.29%), உத்தரப் பிரதேசம் (6.08%), லடாக் (5.90%), கர்நாடகா (5.86%) ஆகியவை இடம்பெற்றுள்ளது.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகமாக இருக்க என்ன காரணம்..? இந்திய அளவில் அதிக பணவீக்கத்தைத் தமிழ்நாடு கொண்டிருக்க 3 முக்கியமான காரணம் உள்ளது.
1. உணவு பணவீக்கம்
2. அதிகரிக்கும் ஊழியர்கள் செலவு
3. உள்ளூர் உற்பத்தி – சப்ளையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை அடிப்படை காரணமாக உள்ளது.
உணவு பணவீக்கம்
இந்தியாவின் சராசரி உணவு பணவீக்கம் செம்படம்பர் மாதத்தில் 7.74 சதவீதமாக இருந்த நிலையில் தமிழ்நாட்டில் தடாலடியாக 10.62 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மவை பொய்த்தது மற்றும் எல் நினோ வானிலை பாதிப்பு காரணமாகத் தமிழ்நாட்டின் நீர் ஆதாரம் குறைந்து விவசாய பொருட்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக வெங்காயம், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை ஆகியவற்றின் விலை நாடு முழுவதும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதோடு விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை காரணமாகத் தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் ஊழியர்கள் செலவு
தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையில், ஊழியர்கள் அதிகம் தேவைப்படும் சேவைத் துறையில் அதிகப்படியான சம்பளம் பெரும் சுமையாக சிபிஐ பணவீக்கத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தொழிற்துறைகள் குறைந்த வருமானம் கொண்ட மாநிலத்தில் இருந்து அதிகப்படியான புலம்பெயர்ந்த ஊழியர்களை பணியில் அமர்த்தினாலும் அதிகரித்தும் ஊழியர்களின் சம்பளம் உற்பத்தித் துறை, சேவைத் துறை, போக்குவரத்துத் துறை, MSME நிறுவனங்கள் வரையில் பெரும் சுமையாக மாறியுள்ளது.
செலவுகள் அதிகரிக்கும் போது பொருட்கள் மற்றும் சேவையின் விலை அதிகரிக்கும் இது நேரடியாக CPI பணவீக்கத்தைப் பாதிக்கும்.
எரிபொருள் செலவுகள்
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் முதல் அனைத்தும் மற்ற சில மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து பணவீக்கம் தமிழ்நாட்டில் 14.7 சதவீதமாக உள்ளது. இது தமிழ்நாட்டின் உணவு பணவீக்கத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
இதோடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தென்னிந்திய மாநிலங்களில் பணவீக்கம் அதிகமாக இருக்க முக்கியமான காரணம் அதிகப்படியான Purchasing Power தான் எனச் சந்தை ஆய்வறிக்கை கூறுகிறது.
இதனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தென்னிந்திய மாநிலங்கள் அல்லது வளர்ந்த மாநிலங்களில் விலைவாசி உயர்ந்தாலும் பொருட்கள் வாங்குவது அதிகமாக இருக்கும். இதனால் நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பது இயல்பு என்ற விளக்கமும் எஸ்பிஐ ஆய்வறிக்கை கூறுகிறது.

