Last Updated:
ராகுல் காந்தி மற்றும் 10 எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்தியா கூட்டணி மனு தாக்கல் செய்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் பல்வேறு மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் 10 எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது; சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் (SIR) தொடங்குவது குறித்த ஜூன் 24, 2025-ன் முடிவு உட்பட, சர்ச்சைக்குரிய முடிவுகள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் முழுமையான கோப்புகள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள், அதிகாரிகளின் குறிப்புகள் மற்றும் ஆட்சேபனைகள் ஆகியவற்றை தெரிவிக்க உத்தரவிட வேண்டும்.
முன்னறிவிப்போ அல்லது முறையான விளக்கமளிக்கும் வாய்ப்போ இன்றி எந்தவொரு வாக்காளரின் பெயரும் நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள், நீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கை சார்ந்த விவரங்கள் ஆகியவற்றை வாக்குச்சாவடி வாரியாக வெளியிட உத்தரவிட வேண்டும்.
ECINET மற்றும் ERONET உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் தரவுத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட நீக்கங்கள் மற்றும் திருத்தங்களை தணிக்கை செய்ய, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும். இந்த விவகாரம் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் வரை, தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இடைக்காலமாக நிறுத்திவைக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராகுல் காந்தி தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவில் 14 குறைகள் உள்ளதை நீதிமன்றப் பதிவகம் கண்டுபிடித்துள்ளது. அதாவது சரியான ஆவணங்கள் இல்லாதது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அடையாள அட்டை நகல் மங்கலாக இருப்பது, மனுவை தாக்கல் செய்வதற்கான கட்டணத்தில் ரூ. 220 பற்றாக்குறை இருப்பது, ஆவணங்களில் முழுமை இல்லாதது உள்ளிட்ட 14 குறைகள் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்து ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடலாம் எனத் தெரிகிறது.


