Last Updated:
கேரளா மாநிலம் கொச்சின் விமான நிலையம் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் மூவர் மீது மினி கூப்பர் காரை ஏற்றி உயிரை பறித்த 19 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் அருகே உள்ள நெடும்பசேரி பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் தேவிகா, கோபிகா, இஜாஸ் ஆகிய மூன்று நண்பர்கள் தேநீர் அருந்திவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிபாய்ந்து வந்த, மினி கூப்பர் கார் ஒன்று, ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியது.
கார் மோதிய வேகத்தில் ஸ்கூட்டரில் பயணித்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். காருக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டர், சாலையில் பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 வயதான தேவிகா வயநாட்டைச் சேர்ந்தவர். 22 வயதான கோபிகா பாலக்காட்டைச் சேர்ந்தவர். மற்றும் 21 வயதான இஜாஸ் கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர். இவர்கள் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிந்து, விமானத்துறை தொடர்பான படிப்பைத் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு காரிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அங்கமாலியைச் சேர்ந்த 19 வயதான சுஹைல் சஜீவ் – ஐ அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது சற்றும் மனிதாபிமானமோ அல்லது வருத்தமோ இன்றி சாலைகள் என்பது வாகனங்களை ஓட்டத்தானே? இந்த விவகாரத்தை எனது அப்பா பார்த்துக்கொள்வார்? என தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இதனை அடுத்து கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சுஹைல் சஜீவ்-வை கைது செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் ட்ராக் செய்ய.. விபத்துக்கு முன்பு சுஹைல் சஜீவ், பல மதுக்கூடங்களில் காரை நிறுத்தி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், நெடுஞ்சாலையில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல், மினி கூப்பர் காரை ஓட்டிச் செல்லும் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் சுஹைல் சஜீவிற்கு ஏற்கெனவே அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும்ம் வாகனம் ஓட்டும் பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் தானும் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்ததாகக் கூறும் உயிரிழந்தவர்களின் சக நண்பர் பிரியத், அந்த மினி கூப்பர் கார் தன்னைக் கடந்து சென்றபோது, வேகத்தைக் கண்டு ஒதுங்கியதாக அச்சம் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் கேட்ட பெரும் சத்தத்தைத் தொடர்ந்து, தனது நண்பர்களை சாலையில் சடலமாக கண்டதாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மதுபோதையில் காரை ஓட்டி மூன்று உயிர்களை காவு வாங்கிய இந்த சம்பவம் கேராளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மதுபானம் அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது 23 எனக் கூறப்படும் நிலையில், 19 வயது இளைஞருக்கு மதுபானம் வழங்கப்பட்டதா? அப்படியானால், அதற்கு யார் பொறுப்பு? இந்த விவகாரத்தில், இளைஞருக்கு மதுபானம் வழங்கியதாகக் கூறப்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கலால் துறை அமைச்சர் எம். லிஜு உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, மருத்துவப் பரிசோதனைக்காக சுஹைலை அழைத்துச் சென்றபோது, உயிரிழந்தவர்களின் நண்பர்கள் சிலர் அவரைத் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறையினரின் விசாரணை நீடிக்கும் நிலையில், அதன் முடிவில் கைதான இளைஞர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவரும்..


