Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் பல்வேறு மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்தியா கூட்டணி சார்பில் இன்று உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி சென்று தலைமை நீதிபதியைச் சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற நீதிபதி வழக்கு நிலுவையில் இருக்கும்போது இது தொடர்பான சந்திப்பு சரியாக இருக்காது என்றும், உச்சநீதிமன்றம் அனைவருக்கும் திறந்தே இருக்கும் எனவும் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட எம்.பி.க்கள் சந்திப்புக்கான அனுமதியை மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். முன்னதாக இன்று காலை டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், டெல்லியை சிறையாக மாற்றியது ஏன், ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூட நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும், மத்திய அரசு அதிகாரிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் வெவ்வேறு போராட்டங்கள் நடைபெறவில்லை என்றும், நடந்து வரும் அனைத்துப் போராட்டங்களும் ஞானேஷ் குமாருக்கு எதிரானவைதான் என்றும் கூறினார்.


