இலங்கை சுங்கத்தால் தமிழ் நூல்கள் முடக்கப்பட்டயை அடிப்படை உரிமைகளை மீறியதாக குற்றஞ்சாட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் பி.பிரதீபனின் தமிழ் நூல்களை இலங்கை சுங்கத் திணைக்களம் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளமையானது, அவரது அடிப்படை மனித உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவின் சென்னையில் அச்சிடப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட 288 புத்தகங்கள் அடங்கிய குறித்த தொகுதி, “தேசிய நல்லிணக்கத்திற்குப் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும்” என்ற காரணத்தைக் காட்டி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தொகுதியில் ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்’, ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’, ‘பயங்கரவாதி’ மற்றும் ‘சயனைட்’ ஆகிய நான்கு தலைப்பிலான புத்தகங்கள் அடங்கியிருந்தன. இதில் ‘பயங்கரவாதி’ மற்றும் ‘சயனைட்’ ஆகிய இரு நூல்களும் புனைகதைகள் (புதினங்கள்) என இலங்கை கலைக் பேரவை வகைப்படுத்தியதை அடுத்து விடுவிக்கப்பட்டன. இருப்பினும், ‘இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்’ நூலின் 75 பிரதிகளையும், ‘எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்’ நூலின் 147 பிரதிகளையும் சுங்கத் திணைக்களம் தொடர்ந்து தடுத்து வைத்திருந்தது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனிய தலைமையிலான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையின் போது; இலங்கை சுங்கத் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் தெளிவான அதிகார வரம்பை நிறுவத் தவறி, பொறுப்புகளை ஒன்றின் மீது ஒன்று சாட்டி மாற்றி மாற்றித் தப்பித்து வந்தமை அம்பலமானது.
அரசு நிறுவனங்களுக்குள் தமிழ் மொழி ஆளுமை இல்லாமை மற்றும் ஒரு புத்தகத்தின் அட்டையில் சித்தரிக்கப்பட்டிருந்த பிரிக்கப்பட்ட இலங்கை வரைபடம் குறித்த நிறுவனங்களின் அச்சமுமே, இந்த ஆரம்பக்கட்டப் பறிமுதல் நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தனது சட்ட பகுப்பாய்வில் மனித உரிமைகள் ஆணைக்குழு பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளது:
அரசியலமைப்பின் 14(1)(a) பிரிவானது பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை உறுதியளிக்கிறது; இது அரசுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதிர்ச்சியளிக்கும், வழக்கத்திற்கு மாறான அல்லது சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளிப்படையாகப் பாதுகாக்கிறது.
நிறுவப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய ஆணைக்குழு, தண்டனைச் சட்டக்கோவையின் 120ஆம் பிரிவின் கீழ் தனிப்பட்ட குற்ற உணர்வு, நோக்கம் மற்றும் காரணி ஆகியவற்றின் அவசியமான சட்ட வரம்புகளைப் பிரதிவாதிகள் நிரூபிக்கத் தவறிவிட்டனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இலங்கையில் 2002ஆம் ஆண்டிலேயே குற்றவியல் அவதூறுச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதால், அரச அதிகாரிகளுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ எதிராக அவதூறு பரப்பும் கருத்துகள் இருப்பதாகக் கூறி புத்தகங்களைக் கைப்பற்றுவதற்கு சுங்கத் திணைக்களத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பால், இவ்வாறான தன்னிச்சையான நீண்டகாலத் தடுப்புக் காவலாது:
- அரசியலமைப்பின் 12(2) பிரிவின் கீழ் மொழி அடிப்படையிலான சட்டவிரோத பாகுபாடு ஆகும்,
- 12(1) பிரிவின் கீழ் சட்டத்தின் முன் சமத்துவத்தை மீறுவதாகும்,
- 14(1)(f) பிரிவின் கீழ் எழுத்தாளரின் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும், தாய்மொழியைப் பயன்படுத்துவதற்குமான உரிமையை மீறுவதாகும் என மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது.
இதன் விளைவாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு நூல்களின் அனைத்துப் பிரதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறும், இது தொடர்பான முறையான இணக்கப்பாட்டு அறிக்கையை 2026 டிசம்பர் 02ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான நடராஜா காண்டீபன், கலாநிதி விராஞ்சன் ஹேரத் மற்றும் எச். தமிழவள் காண்டீபன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.


