சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவின் தண்டனையை இரத்துச் செய்யக் கோரி, இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டத்தரணிகளின் கூட்டு முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை (11) சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முகமது நபியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில், அனோஜன் சிவராசாவுக்கு கீழ் நீதிமன்றம் முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. எனினும், அந்தத் தீர்ப்பை ரத்துச் செய்த சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இலங்கையின் விசேட சட்டக் குழுவினருக்கும் சவூதி அரேபிய சட்டத்தரணிகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இந்த மேன்முறையீடு தயாரிக்கப்பட்டது. ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத்தின் ஒருங்கிணைப்பிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மாற்றியமைப்பதற்காகச் செயல்படும் இலங்கை சட்டக் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும, பைசர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆசாத் நவாவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

