சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள், சிறைச்சாலை வளாகத்துக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, தங்களது காவியுடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட பிக்குகள் அங்கம் வகிக்கும் நிகாயங்கள் அல்லது பௌத்த பீடங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நிலையான உத்தரவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகள், மகா சங்கத்தினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் நோக்கில், எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, தேவையான திருத்தங்களை முன்மொழிவதற்காக விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளது.
உத்தேச விதிமுறைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்தால், சம்பந்தப்பட்ட நிகாயங்கள் அல்லது பௌத்த பீடங்களின் பரிந்துரைகளைப் பெற்றுள்ள சிறையிலுள்ள பௌத்த பிக்குகள், சிறைச்சாலை வளாகத்துக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும்போது தங்களது காவியுடைகளை அணிய அனுமதி கிடைக்கும்.


