Last Updated:
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் இமயமலையின் லாங்டாங் தேசியப் பூங்கா அருகே அமைந்திருந்த பனிப்பாறை மற்றும் பிரம்மாண்டமான பாறைகள் திடீரெனச் சரிந்து மிகக் கொடூரமான இயற்கை பேரழிவு ஏற்பட்டது
நேபாளத்தில் புத்திகண்டகி ஆற்றில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் இமயமலையின் லாங்டாங் தேசியப் பூங்கா அருகே அமைந்திருந்த பனிப்பாறை மற்றும் பிரம்மாண்டமான பாறைகள் திடீரெனச் சரிந்து மிகக் கொடூரமான இயற்கை பேரழிவு ஏற்பட்டது. சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறையும் நூற்றுக்கணக்கான மில்லியன் டன் எடையுள்ள பாறைகளும் கீழே சரிந்து விழுந்தன.
சரிந்து விழுந்த பனி, பாறைகள் மற்றும் சகதி ஆகியவை ‘லெண்டே கோலா’, ‘போட் கோஷி’ மற்றும் ‘திரிசூலி’ நதி அமைப்புகளுக்குள் சீறிப் பாய்ந்தன. இதன் தாக்கத்தில் நேபாளத்தில் பாயும் முக்கிய ஆறுகள் இயல்பான அமைப்பிலிருந்து விலகின. காட்டாற்று வெள்ளம் உருவாகின. ஒரு சொட்டு கூட மழை பெய்யாமல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளத்தின் ரசுவா (Rasuwa), நுவாகோட் (Nuwakot), தாடிங் (Dhading) மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் இன்று மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோர்கா மாவட்டத்தில் உள்ள புத்தி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட புதிய வெள்ளப்பெருக்கு, கோர்கா மாவட்டத்தில் இரண்டு தொங்கு நடைப்பாலங்களையும் ஒரு எஃகுப் பாலத்தையும் அடித்துச் சென்றதாகவும், வீடுகளைச் சேதப்படுத்தியதாகவும், பல குடியிருப்புகளை அபாயத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம், ஆற்றங்கரையோரக் குடியிருப்புகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


