Last Updated:
இந்த விதி நடைமுறையில் இருப்பதால், 90 அல்லது 100 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழக்கும் அணிகள் கூட, கூடுதல் பேட்ஸ்மேனின் பலத்தால் பின்னர் 200 ரன்களை எட்ட முடிகிறது
ஐபிஎல் தொடரில் சர்ச்சைக்குரிய விதியாகப் பார்க்கப்படும் ‘இம்பாக்ட் பிளேயர்’ முறையை உடனடியாக நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் முன்னாள் கேப்டனுமான அஜின்கியா ரஹானே வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் கேப்டன்கள் கூட்டத்திற்கு முன்பாகவே பெரும்பாலான கேப்டன்கள் இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். ஐபிஎல் விதிகளின்படி இந்த முறை 2027 வரை நடைமுறையில் இருக்கக்கூடும் என்றாலும், தொடரின் அணிகளுக்கான மெகா ஏலத்திற்குப் பிறகாவது இந்த விதி மாற்றப்பட வேண்டும் அல்லது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் உண்மையான ஆல்-ரவுண்டர்களின் (All-rounders) வளர்ச்சிக்கு இந்த ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளதாக ரஹானே கவலை தெரிவித்தார். ஐபிஎல் அணிகள் தங்களது பேட்டிங் அல்லது பந்துவீச்சை பலப்படுத்திக் கொள்ள பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலரையும், பவுலருக்கு பதிலாக பேட்ஸ்மேனையும் மாற்றுவதால், போட்டிகளில் ஆல்-ரவுண்டர்களின் பங்கும் அவசியமும் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களை உருவாக்குவதில் இந்திய அணி தற்போது சிரமப்படுவதையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்.
இந்த விதி நடைமுறையில் இருப்பதால், தொடக்கக் கட்ட விக்கெட்டுகளை இழந்து 90 அல்லது 100 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழக்கும் அணிகள் கூட, கூடுதல் பேட்ஸ்மேனின் பலத்தால் பின்னர் 200 ரன்களை எட்ட முடிகிறது என்று ரஹானே விவரித்தார்.
கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்திய அணியின் எதிர்கால நலனுக்காகவும், ஆல்-ரவுண்டர்களின் முழுமையான திறமையை வெளிக்கொணர்வதற்காகவும் இந்த ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


