அதிகளவில் புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிவதற்காக சிறப்பு நிழற்படப் பிரிவொன்றை (Special Photography Unit) அமைப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள நகரங்களின் முக்கிய இடங்களில் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அதிகாரிகள் வீதிகளில் அதிகப்படியான புகையை வெளியேற்றும் வாகனங்களை மறைமுகமாகக் கண்காணித்து புகைப்படம் எடுப்பார்கள்.
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும்
பெறப்பட்ட புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் வாகனங்களை பழுதுபார்க்கும்படி வாகன உரிமையாளர்களுக்கு அதே நாளிலேயே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உத்தரவுகளைப் பெறும் வாகன உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களை பழுதுபார்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேரஹெரவில் அமைந்துள்ள வாகனப் புகை பரிசோதனை மையத்திற்கு நேரில் கொண்டு சென்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும்பட்சத்தில் குறித்த வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையின் தரவு அமைப்பில் ‘கறுப்புப் பட்டியலில்’ (blacklist) சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்கள், வருவாய் உரிமங்களைப் (revenue licenses) பெறுவதிலும் உரிமையை மாற்றுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

