
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கு திசையிலிருந்தோ அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்தோ வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும். சாதாரண நிலையில் கடற்பரப்புகள் அமைதியாகக் காணப்படும்.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்றானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் மிகத் தீவிரமாக வீசக்கூடும் என்பதனால், அக்காலப்பகுதியில் குறிப்பிட்ட கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.

