ரூ.8 லட்சம் கோடி இழப்புக்கு மத்தியில் தூள்கிளப்பும் TCS.. காலாண்டு முடிவுகளுக்கு முன்பே மாஸ்..!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சந்தை எதிர்பார்ப்புகளுக்கு இணங்க இன்றைய வர்த்தகத்தில் சுமார் 3% உயர்ந்துள்ளது.
டிசிஎஸ்-ஐ காட்டிலும் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் அக்சென்டர் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான முதலீட்டாளர்கள் ஆர்வம் கடந்த 1-2 வாரங்களில் அதிகரித்துள்ளது.

இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலை காலை வர்த்தகத்தில் 3 சதவீதம் வரையில் உயர்ந்தது. ஆனால் சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால் டிசிஎஸ் தனது அதிரடியான உயர்வைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
தற்போது சென்செக்ஸ் குறியீடு 900 புள்ளிகள் சரிந்து சந்தை மதிப்பு 8.3 லட்சம் கோடி ரூபாய் இழந்த நிலையிலும் டிசிஎஸ் பங்குகள் 0.86 சதவீதம் உயர்வில் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் மட்டும் அல்லாமல் டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், இன்போசிஸ் ஆகிய பிற ஐடி சேவை நிறுவனங்களும் உயர்வுடன் உள்ளது. இந்திய முதலீட்டாளர்களுக்கு ஐடி நிறுவனங்களின் இந்த காலாண்டு முடிவுகள் மிகவும் முக்கியமானது.
ஏனென்றால் இக்காலாண்டு முடிவுகள் தான் சந்தையில் IT சேவைகளுக்கான தேவை மீண்டு உயர்கிறதா அல்லது ஏஐ தொழில்நுட்பம் மொத்த வர்த்தகத்தையும் விழுங்குகிறதா என்பதைக் காட்டும்.
மேலும் ஏஐ தொழில்நுட்பம் வந்த பின்பு ஐடி நிறுவனத்தின் லாப வரம்பு எப்படி உள்ளது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கிடைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் இந்திய நிறுவனங்களுக்கு எந்தளவுக்குப் பலன் அளிக்கிறது என்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறது.
ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியிடும் முன்பே டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 13 சதவீதம் வரையில் அதிகரிக்கலாம் எனக் கணித்துள்ளது, இந்த உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு.
இதேபோல் இக்காலாண்டு முடிவுகளை வெளியிடும் கூட்டத்தில் டிசிஎஸ் நிர்வாகம் இடைக்கான ஈவுத்தொகையை அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் டிசிஎஸ் இன்று தனிக் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்குச் சான்று சென்செக்ஸ் குறியீடு 900 புள்ளிகள் வரையில் சரியும் போதும் டிசிஎஸ் 0.80 சதவீதம் வரையில் உயர்ந்து காணப்படுவது தான்.
டிசிஎஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வோர் இன்றைய காலாண்டு முடிவுகளில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, லாப மார்ஜின், புதிதாகப் பெறப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு, ஏஐ வருவாய் ஆகியவற்றைக் கவனித்து முதலீட்டுக்கான முடிவுகளை எடுக்கலாம்.

