Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 6ஆம் தேதி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற நிலையில், ஆகாஷ்வானி வளாகத்தின் அருகே தடுத்து நிறுத்தப்பட்டு பின் இரவு கைது செய்யப்பட்டனர். இதேபோல் 7ஆம் தேதி ஜந்தர் மந்தர் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து காவல்துறை கைது செய்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஒன்றுகூடி ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள், குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
தொடர்ச்சியாக குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்து முறையிட்டனர்.
தொடர்ந்து வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். வாக்குகள் திருடப்படுகின்றன என்பது நாடு முழுவதற்கும் தெரியும். நரேந்திர மோடி இதன் சூத்திரதாரி. அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் இதனைச் செயல்படுத்தியவர்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் இன்று இந்த உண்மையை மறுக்கவில்லை.
இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்க பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் சதி செய்ததாக அந்த மனுவில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். நாங்கள் கூறியதை குடியரசுத் தலைவர் மறுக்கவோ, அது குறித்து கேள்வி எழுப்பவோ அல்லது அதனுடன் விவாதிக்கவோ இல்லை. அவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டார்; அதேவேளையில், ‘தேர்தல் திருட்டு’ (election chori) குறித்த ஆதாரங்களை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எங்களிடம் கூறினார். ‘தேர்தல் திருட்டு’ குறித்த ஆதாரங்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும் என்று நான் கூறினேன். மாநிலத்திற்குப் பின் மாநிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தல் திருடப்பட்டுள்ளது; அப்படியிருந்தும், அதற்கான ஆதாரங்களை அவரிடம் சமர்ப்பிக்குமாறு குடியரசுத் தலைவர் விரும்புகிறார். நாங்கள் சேகரித்துள்ள ‘தேர்தல் திருட்டு’ தொடர்பான ஆதாரங்களை, இந்தியக் குடியரசுத் தலைவர் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது அவரிடம் சமர்ப்பிப்பதில் இதே குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்” எனத் தெரிவித்தார்.
#WATCH | Delhi: After meeting the President, Lok Sabha LoP Rahul Gandhi says, “I sat in quite an unbelievable meeting. First, we took a memorandum to the President of India. In that memorandum, we clearly stated that the Prime Minister, HM Amit Shah, and CEC Gyanesh Kumar had conspired to destroy Indian democracy. The President in no way denied what we said, questioned what we said, or argued what we said. She accepted our statement and then told us that we needed to provide her with proof of ‘election chori’. I said that the evidence of ‘election chori’ is known to the entire country. State after state has been stolen. The 2024 election was stolen, and yet the President wants us to submit proof to her. This same group of people will be very happy to present the evidence of ‘election chori’ that we have collected to the President of India when she is ready to accept it…”
— ANI (@ANI) October 9, 2026
அதேசமயம், நாளை (10ஆம் தேதி) கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், டெல்லி நோக்கி செல்லும் பல்வேறு இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பல ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, ஜந்தர் மந்தர் சுற்றி 4 கி.மீ சுற்றளவிற்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை தற்காலிக இணைய சேவை தடையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து டெல்லியில் பதற்றமான சூழல் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.


