20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் யுத்தத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் யார் அதிக வெற்றிகளை வசப்படுத்தியது. இந்திய வீரர்களின் செயல்பாடுகள் என்ன என்பதை நினைவுபடுத்துகிறது இந்த செய்தி தொகுப்பு.
கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவும், வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகவும் பார்க்கப்படுவது இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டமாகும். குறிப்பாக உலகக் கோப்பையில் இரு அணிகளின் மோதும் ஆட்டத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுரசிக்கின்றனர்.
தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் 9வதுஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதற்கு முன் நடைபெற்ற 8 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 7 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன.
2007ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையின் அறிமுக தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். குரூப் சுற்று லீக் ஆட்டத்தில் விளையாடிய இரு அணிகளும் 141 ரன்கள் எடுக்க போட்டி டிராவில் முடிவடைந்தது. இறுதியில் Bowl Out முறையில் 3-0 என்ற கணக்கில் முதல் வெற்றியை ருசித்தது இந்தியா.
2007 இறுதிப்போட்டியிலும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளே பலப்பரீட்சை நடத்தினர். இதில் கம்பீரின் 75 ரன்களால் 157 ரன்கள் சேர்க்க சேசிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மிஸ்பா உல் ஹக் கொடுத்த கடைசி கேட்ச்சை ஸ்ரீசாந்த் பிடிக்க முதல் கோப்பையை உச்சிமுகர்ந்தது தோனி தலைமையிலான இந்திய அணி…
இதன் பிறகு 2009, 2010ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைகளில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவது போன்ற அட்டவணை அமையவில்லை எனவே ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 2012ம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மீண்டும் இரு அணிகள் மல்லுகட்டின.
தமிழ்நாட்டின் தங்கங்களான லட்சுமதி பாலாஜி மற்றும் அஸ்வினின் மாயஜால பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்குள் சுருண்டது, பின்னர் வந்த விராட் 78 ரன்கள் விளாச மூன்று ஓவர் மீதமிருக்கும் போதே வெற்றி இலக்கை எட்டியது இந்தியா. இந்த போட்டியில் விராட் பந்துவீசி ஒரு விக்கெட்டையும் சாய்த்து ஆட்டநாயகன் விருதை அலங்கரித்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது இந்திய அணி
தொடர்ந்து 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்டது. பங்களாதேஷ் டாக்காவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 130 ரன்களுக்குள் சுருட்டி, அசால்டாக 7 பந்துகள் மீதமிருக்கும் போது வெற்றி இலக்கை தொட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா… இந்த போட்டியில் மிஸ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். குரூப் சுற்றில் நம்மிடம் அடைந்த தோல்வியால் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது.
2016ம் ஆண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பிடித்தனர். இம்முறை இந்திய அணி 118 ரன்களுக்குள் பாகிஸ்தானை சுருட்டி அசத்தியது. நெக்ரா,பும்ரா,ஜடேஜா,பாண்டியா,ரெய்னா என அனைவரும் விக்கெட் வேட்டை நிகழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்தியா விராட் கோலியின் அதிரடி அரைசதத்தால் 13 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றியை ருசித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தானை எதிர்கொண்டது ஆனால் இம்முறை இந்தியாவிற்கு அதிர்ச்சியே காத்திருந்தது. கொரோனா காலம் என்பதால் இந்த தொடர் துபாயில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 151 ரன்கள் சேர்த்தது.
மீண்டும் விராட் கோலி அரைசதம் அடித்து அணிக்கு உதவினார். ஆனால் சேசிங்கில் களமிறங்கிய பாகிஸ்தானின் ஓபனர்கள் பாபர் அசாம், ரிஸ்வான் இணை விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அதுவரை உலகக் கோப்பையில் இந்தியா வீழ்ந்ததில்லை என்ற வரலாறு திருத்தி எழுதப்பட்டது. இந்த சோகம் ஒரு புறம் இருக்க இந்திய அணி இந்த தொடரில் லீக் சுற்றோடு நடையை கட்டியது ரசிகர்களை மேலும் சோகத்தில் மூழ்கடித்தது.
பின்னர் 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணிக்கு முதல் போட்டி பாகிஸ்தானிடமே அமைந்தது. கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கிய இந்திய அணியில்கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்த விராட் கோலி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
வெற்றி இலக்கை கடைசி பந்தில் எட்டி இந்தியா த்ரில் வெற்றியை ருசித்து அரங்கத்தை அதிரவைத்தது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஏழு முறை விளையாடியதில் கிங் கோலி ஐந்து போட்டிகளில் களம் கண்டுள்ளார். இதில் நான்கு முறை ஆட்டமிழக்காமல் நான்கு அரைசதம் விளாசி பாகிஸ்தான் அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)