சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த முடிவை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவை கோரி தினியாவல பாலித தேரரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார, நீதி அமைச்சின் செயலாளர், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி மற்றும் பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் பொறுப்பு என்று அரசியலமைப்பின் 9-வது பிரிவு வலியுறுத்துவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது துறவற ஆடை அகற்றப்பட்டு, சிறைக்கைதிக்குரிய உடையிலேயே அவர் கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்றும் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த முடிவு, சிறைச்சாலை விதிமுறைகளுக்கும் பௌத்த ஒழுக்க நெறிகளுக்கும் முரணானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைக்காலத் தடையுத்தரவு
அதற்கிணங்க, ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கான முடிவை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

அத்தகைய நடவடிக்கையை கட்டாயமாக்கும் ஏதேனும் சிறைச்சாலை விதிமுறை அல்லது சுற்றறிக்கை இருந்தால், அதையும் செல்லுபடியற்றதாக்கும் உத்தரவை இந்த மனு கோருகிறது.
மேலும், ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதிலிருந்து பிரதிவாதிகளைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றையும் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

