உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் திருகோணமலை நிலத்தைப் பராமரித்து வந்த தகுதியற்ற காவல்துறை பரிசோதகர் (IP) ஒருவருக்குப் பரிசாகக் கிளிநொச்சி தலைமையகக் காவல்துறைப் பரிசோதகர் (HQI) பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
அடிப்படைத் தகுதிகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த சாமர சம்பத் தசநாயக்க, “தலைமையகக் காவல்துறைப் பரிசோதகராக (HQI) நியமிக்கப்படுவதற்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியாகவோ (OIC) அல்லது D தரக் காவல் நிலையத்திலாவது சேவையாற்றியிருக்க வேண்டும்.
ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிக்கு அந்தச் அடிப்படைத் தகுதிகள் எதுவும் இல்லை.
உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் திருகோணமலை நிலத்தை இவர் பராமரித்து வந்தார்.
அதற்குப் பரிசாகவே நேரடியாகக் கிளிநொச்சி தலைமையகக் காவல்துறைப் பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் உத்தரவு
அவர் அங்குள்ள பிரதேச அதிகாரிகளின் உத்தரவுகளைக் கூடக் மதிப்பதேயில்லை” என தெரிவித்துள்ளார்.
இத்தகைய தகுதியற்ற ஒருவரைப் பரிந்துரைத்தது காவல்துறை அதிபரா (IGP) அல்லது தேசிய காவல்துறை ஆணைக்குழுவா எனக் கேள்வியெழுப்பிய அவர், இந்நியமனம் பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த அதிகாரி தற்காலிக அடிப்படையிலேயே அப்பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றும் தற்காலிகமாகப் பணியாற்ற அனுமதிக்கப்படும் அதிகபட்சக் காலம் ஒரு வருடம் மட்டுமே என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
குறித்த அதிகாரிக்கு 29 ஆண்டுகள் சேவை அனுபவம் இருந்தபோதிலும் குறித்த தரத்தில் தொடர்ந்து பணியாற்றத் தேவையான தகுதிகள் அவரிடம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனால் அவரை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டு கிளிநொச்சி தலைமையகக் காவல்துறைப் பரிசோதகர் பதவிக்குத் தகுதியான புதிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

