நேரடி கம்பி இணைப்பு இல்லாமல், காற்றின் வழியாக மின்சாரத்தைப் பரிமாற்றம் செய்யும் வயர்லெஸ் மின்சாரப் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை பின்லாந்து செயல்படுத்திக் காட்டியுள்ளது.
மின்காந்தப் புலங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை கம்பிகள் இல்லாமல் மாற்றும் இந்த அடிப்படைத் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர்கள் மற்றும் மின்சாரப் பல் துலக்கிகள் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், ஒரு Transmitting Coil மூலம் உருவாக்கப்படும் மாறும் காந்தப்புலத்திலிருந்து, Receiving Coil மின்காந்த ஆற்றலை மின்சாரமாக மாற்றுகிறது. மேலும், Resonant Coupling போன்ற மேம்பட்ட முறைகள் மூலம் பரிமாற்றத் திறனை அதிகரிக்க முடியும்.
எதிர்காலத்தில், மின்சார வாகனங்களை பிளக் இல்லாமல் சார்ஜ் செய்வது, தொலைதூர சென்சார்களுக்கு மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும்.
எனினும், நீண்ட தூரத்திற்கு அதிகளவு மின்சாரத்தைப் பரிமாற்றம் செய்வதில் செயல்திறன், பாதுகாப்பு உள்ளிட்ட சவால்கள் உள்ளன. எனவே, தற்போது பாரம்பரிய மின்கம்பிகள் தொடர்ந்து நடைமுறைக்கு ஏற்ற மின்சாரப் பரிமாற்ற முறையாக உள்ளன.


