வெனிசுலாவில் அடுத்தடுத்து வரும் எண்ணெய் கப்பல்.. டெலிவரி இடம் எது தெரியுமா..?
அமெரிக்கா – ஈரான், யெமன் நாட்டில் ஹவுதி – சவுதி அரேபியாவுக்கும் மத்தியிலான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியா எண்ணெய் நிறுவனங்கள் புதிய சப்ளையர்களை தேடி வருவதைத் தாண்டி, வளைகுடா அல்லாத நாடுகளிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.
ஈரான் போருக்குப் பின்பு ரஷ்யாவில் வரும் கச்சா எண்ணெய்க்குக் கிடைத்து வந்த தள்ளுபடி குறைந்துள்ளது, அதேபோல் அமெரிக்காவின் 100 சதவீத வரி விதிப்பு அச்சம் இந்தியா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை வெனிசுலா பக்கம் திருப்பியுள்ளது.

அமெரிக்காவின் திடீர் தாக்குதலுக்குப் பின்பு வெனிசுலா-வில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தும், எண்ணெய் உற்பத்தியில் புதிய கூட்டணி, புதிய முதலீடுகள் வரத் துவங்கியுள்ளது. ஆனாலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையின் காரணமாக வெனிசுலா கச்சா எண்ணெய் சர்வதேசச் சந்தைக்கு வருவதில் பல கட்டுப்பாடுகள் இன்றளவும் உள்ளது.
வளைகுடாவில் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிய வாடிக்கையாளர்களை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ரஷ்யா போல் தள்ளுபடி கொடுக்க துவங்கியுள்ளது வெனிசுலா எண்ணெய் நிறுவனங்கள். ஆனால் வெனிசுலா எண்ணெய்யை வாங்க வேண்டும் என்றால் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெனிசுலா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் அக்டோபர் மாதத்தில் பெரியளவில் அதிகரிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் வெனிசுலா நாட்டின் எண்ணெய் வாங்கும் முதன்மை நிறுவனமாக முகேஷ் அம்பானியின் நிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது. அமெரிக்க அரசிடம் இருந்து வெனிசுலா எண்ணெய் வாங்குவதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பு அனுமதியைப் பெற்றுள்ளது.
மேலும் ரஷ்யாவில் இருந்து வரும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதால், வெனிசுலா எண்ணெய் மலிவானதாக மாறியுள்ளது.
கச்சா எண்ணெய் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கெப்லர் நிறுவனம் வெளியிட்டுள்ள டேட்டாவின் படி செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளுக்கு சுமார் 1.96 லட்சம் பேரல் அளவிலான வெனிசுலா எண்ணெய் இந்தியாவுக்கு வந்த நிலையில், அக்டோபரில் 2 மடங்கு அதிகரித்து ஒரு நாளுக்கு 4.65 லட்சம் பேரல் வரையில் அதிகரித்துள்ளது என Kpler நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து எண்ணெய் கப்பல்களும் சிக்கா (Sikka) துறைமுகத்தை டெலிவரி இடமாகக் கொண்டுள்ளது. இது குஜராத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது எண்ணெய் இறக்குமதிக்காகப் பயன்படுத்தப்படும் துறைமுகமாகும். இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் வெனிசுலா எண்ணெய் வாங்க அனுமதி பெறாத காரணத்தால் வெனிசுலாவில் இருந்து வரும் மொத்த எண்ணெய்யும் முகேஷ் அம்பானி வாங்குகிறார்.

