முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் கரியவசம், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்துள்ளது.
சிரந்தி ராஜபக்ஷவிடம் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பிரதீப் கரியவசமும் ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளில் கைது செய்யப்பட்டார்.
இருவரிடமும் சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்ட ஆலோசகர் யஷ்மதா லோகுநாரங்கொட, ‘சிரிலிய சவிய’ என்ற பெயரில் மக்கள் வங்கியின் சுதுவெல்ல கிளையில் பராமரிக்கப்பட்ட கணக்கில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாக 2015ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு முன்னணியினால் செய்யப்பட்ட எழுத்துமூல முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும், பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து நடத்திய விசாரணையில், 2010ஆம் ஆண்டு சி.டி. ஸ்கேனர் இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக சிரந்தி ராஜபக்ஷவின் எழுத்துமூல கோரிக்கையின் அடிப்படையில், தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ கணக்குக்கு 10 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக பிரதீப் கரியவசம் இருந்ததாகவும், இந்தப் பணப் பரிமாற்றம் வங்கியின் வழக்கமான நடைமுறைக்கு புறம்பாக இடம்பெற்றதாக அப்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றில் கூறப்பட்டது.
இதனடிப்படையில், பிரதீப் கரியவசம் இலஞ்சச் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், சிரந்தி ராஜபக்ஷ குறித்த நிதியை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக பயன்படுத்தியதன் மூலம் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.
மேலும், ‘சிரிலிய சவிய’ கணக்கில் தேசிய சேமிப்பு வங்கி மூலம் செலுத்தப்பட்ட 10 மில்லியன் ரூபாயைத் தவிர, அப்போதைய வெளிவிவகார அமைச்சிலிருந்து 8.8 மில்லியன் ரூபாயும், ‘Huawei’ நிறுவனத்திலிருந்து 22 மில்லியன் ரூபாயும் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட குறித்த நிதியைப் பயன்படுத்தி டொரிங்டன் பகுதியில் வீடொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.
இதையடுத்து, சிரந்தி ராஜபக்ஷவை விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.
இதற்கு எதிராக பிரதீப் கரியவசம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ, தனது கட்சிக்காரருக்கு பிணை வழங்க சட்டரீதியாக நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டிலேயே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், 11 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்காமை, நீதிமன்றில் முன்னிலையாகாமை, சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தல், பிணையில் இருக்கும்போது மற்றொரு குற்றத்தைச் செய்தல் அல்லது பிணை வழங்கப்பட்டால் பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களே பிணை மறுப்பதற்கான அடிப்படைகளாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இவற்றில் எந்தவொரு காரணத்தையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் முன்வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது கட்சிக்காரர் ‘Sleep Apnoea’ எனப்படும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்படுவதாகவும், தூங்கும்போது இயந்திரத்தின் உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இரண்டு மணி நேரத்துக்குள் சுமார் 17 முறை அவர் விழித்துக்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும், அவ்வாறு விழித்துக்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பிரதீப் கரியவசத்தை இரண்டு தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை, சிரந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ‘சிரிலிய சவிய’ அமைப்பு 2006ஆம் ஆண்டு முதல் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நலன்புரி அமைப்பு எனத் தெரிவித்தார்.
அந்த அமைப்பின் சமூகப் பணிகளுக்காக திரட்டப்பட்ட நிதியே தேசிய சேமிப்பு வங்கியால் ‘சிரிலிய சவிய’ கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும், குறித்த நிதி இன்னும் சுதுவெல்ல கிளையில் உள்ள கணக்கிலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.
சி.டி. ஸ்கேனர் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு 160 மில்லியன் ரூபாய் தேவைப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டளவில் 42 மில்லியன் ரூபாய் மாத்திரமே திரட்டப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு அரசாங்க மாற்றத்துக்குப் பின்னர் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கணக்கு முடக்கப்பட்டதால், நிதி திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான சி.டி. ஸ்கேனர் இயந்திரத்தை கொள்வனவு செய்ய முடியவில்லை என்றும் அவர் நீதிமன்றில் விளக்கமளித்தார்.
“எனவே, இங்கு எந்தவொரு ஊழலும் இடம்பெறவில்லை. கணக்கு முடக்கப்பட்டதால் நிதி திரட்டும் நடவடிக்கையே நிறுத்தப்பட்டது. எங்களிடம் திரட்டப்பட்ட 42 மில்லியன் ரூபாயைக் கொண்டு 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான சி.டி. ஸ்கேனரை கொள்வனவு செய்ய முடியவில்லை” என ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்தார்.
மேலும், கணக்கின் மீதான முடக்கம் நீக்கப்பட்டால், தேசிய சேமிப்பு வங்கிக்கு அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“துரதிர்ஷ்டவசமாக, ராஜபக்ஷ ஒருவர் இதில் தொடர்புபட்டிருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

