Last Updated:
அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் மக்கள், பிரதமர் மோடியின் மீது கொண்டுள்ள மாறாத நம்பிக்கைக்கு அவரது இந்த 25 ஆண்டு கால மக்கள் பணியே மிகச்சிறந்த சான்று
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராகவும், அதைத் தொடர்ந்து பிரதமராகவும் மக்கள் பணியில் 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்ததையொட்டி, உலக நாடுகளின் தலைவர்கள் பலர் அவருக்குத் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பான் பிரதமர் சனே தாகைச்சி பிரதமர் மோடிக்கு தனது நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு குஜராத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி ஆற்றிய சிறந்த அரசியல் தலைமையை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவை உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக உயர்த்தியதில் மோடியின் சாதனைகளுக்குத் தனது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தபோது தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான உபசரிப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜப்பான் – இந்தியா இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும், ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்’ பிராந்தியத்தை உருவாக்குவது குறித்தும் பிரதமர் மோடியுடன் பலனளிக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேபோல், பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர், குஜராத் முதல் டெல்லி வரை 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான ஆளுமையை வாழ்த்தியுள்ளார். கடந்த மாதம் தனது இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்த எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மக்களாட்சித் தத்துவத்தில் 25 ஆண்டுகள் தடையற்ற தொடர் ஆட்சியை வழங்குவது என்பது ஒரு அரிய சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் மக்கள், பிரதமர் மோடியின் மீது கொண்டுள்ள மாறாத நம்பிக்கைக்கு அவரது இந்த 25 ஆண்டு கால மக்கள் பணியே மிகச்சிறந்த சான்று என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
குஜராத் முதலமைச்சராகத் தொடங்கி நாட்டின் பிரதமராக 2026-இல் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய நற்பெயரையும், இந்தியாவின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கையையும் இந்த சர்வதேச வாழ்த்துகள் பிரதிபலிக்கின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.


