சென்னை: நடிகர் மோகன் பல வருடம் கழித்து ஹரா திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மோகன் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
80ஸ் காலகட்டத்தில் நடிகர் மோகன் தான் நடித்த திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார். அதிலும் இளம் பெண்கள் மத்தியில் இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. பல பெண்கள் இவரை காதலித்து வந்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில நடிகைகளும் மோகனை காதலித்ததாக அந்த நேரத்தில் சொல்லப்பட்டது.
ஆனால் மோகன் யாரும் எதிர்பார்க்காத வகையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை வெளி உலகத்திற்கு காட்டாமலே இத்தனை வருடங்களாக மோகன் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் திருமண வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் மோகன் பேசுகையில் நான் என்னுடைய மனைவியை ஆரம்பத்தில் காதலித்தபோது அவர் என்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை பல பேருக்கு பிடித்திருக்கலாம். ஆனால் என்னுடைய மனைவியை பார்க்கும் போது தான் எனக்கு இவருடன் தான் என்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு சிந்தனை வந்தது. பார்க்கிற எல்லாரும் மீதும் காதல் வந்து விடாது.
நமக்கு ஒரு சிலரை பார்க்கும்போது அவர்கள் மீது இனம் புரியாத ஒரு அன்பு உருவாகும். அது என்னுடைய மனைவி மீது எனக்கு உருவானது. முதலில் நட்பாகத்தான் நாங்கள் பேசினோம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எனக்கு அவரை பிடித்து விட்டதால் என்னுடைய காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன். அவர் முதலில் வேண்டாம் என்று சொன்னார்.
அதற்கு காரணம் நான் நடிகராக இருக்கிறேன், அதனால் இன்று இருக்கிற மாதிரி எப்போதும் அவர் மீது அன்பாய் இருப்பேனா? அவருடன் மட்டும் என்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்வேனா? என்றெல்லாம் பயந்து இருக்கிறார்கள்.
பிறகு நாட்கள் செல்ல செல்ல என்னுடைய காதலை ஏற்றுக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு என்னுடைய ஏற்ற இறக்கங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய மனைவிதான். என்னைப் பற்றி பல வதந்திகள் சினிமா துறையில் பரவியது. எனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்றெல்லாம் சிலர் பரப்பி விட்டார்கள். ஆனால் அப்போதெல்லாம் என்னுடைய மனைவி மற்றும் என்னுடைய குடும்பத்தினர்கள் தான் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.
வீட்டிற்கு சில செய்தியாளர்கள் வந்து உங்களுக்கு எய்ட்ஸ் இல்லை என்று சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் அதற்கு முடியாது நான் ஏன் அதை சொல்ல வேண்டும் நீங்கள் தானே எனக்கு அந்த நோய் இருக்கிறது என்று பரப்பினீர்கள் அப்போ நீங்களே இல்லை என்று எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். எனக்கு அதற்கு தன்னம்பிக்கையை தந்தது என்னுடைய மனைவிதான் என்று தன்னுடைய மனைவி குறித்து மோகன் பெருமையாக பேசியிருக்கிறார்.
அதோடு அந்த பேட்டியில் நடிகை ஷோபா குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் நடிகை ஷோபா ரொம்பவே நல்லவங்க. எல்லோரிடமும் பாசமா இருப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். எனக்கு ஷோபாவை மட்டுமல்லாமல் அவருடைய அம்மா, அப்பாவையும் நன்றாக தெரியும். அவங்க வீட்டில் இருந்து பலமுறை எனக்கு சாப்பாடு செஞ்சு கொண்டு வந்து இருக்காங்க. ஆனால் ஷோபா திடீரென்று தற்கொலை செய்து கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த பேட்டியில் மோகன் பேசி இருக்கிறார்.


