ஏமன் அரசின் இந்த Operation “Dawn of Yemen”-ல், அவர்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் களம் இறங்கியுள்ளது. இதன்மூலம் ஏமன் ராணுவம், சக்தி வாய்ந்த உள்ளூர் படைகளான ‘ஜயன்ட்ஸ் பிரிகேட்ஸ்’ (Giants Brigades) மற்றும் ‘நேஷன்ஸ் ஷீல்டு’ (Nation’s Shield forces) ஆகியவை இணைந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. செங்கடலின் மிக முக்கியமான கடல்வழிப் பகுதியான பாப் எல்-மந்தேப் (Bab el-Mandeb) மற்றும் துபாப் (Dhubab) பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
ஏமன்
ஹூதிகளின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவும், அரசுப் படைகளுக்கு ஆதரவாகவும் சானா, சாடா மற்றும் அல்-ஜாவ்ஃப் (Al-Jawf) போன்ற பகுதிகளில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலவீனப்படுத்தப்பட்டால் அது ஈரானுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் அமையும்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏன் ஈரானுக்கு முக்கியமானவர்கள்?
ஏனெனில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் உருவாக்கிய நிழல் கூட்டமைப்பில் ஹூதிகளின் அமைப்புதான் மிக முக்கியமான தூணாக உள்ளது. ஹூதிகள் ஒடுக்கப்பட்டால், ஈரானின் Regional Influence சுருங்கிவிடும். அதிலும் குறிப்பாக பாப் எல்-மந்தேப் மற்றும் செங்கடல் கடல்வழிப் பாதைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரானுக்கு ஹூதிகள்தான் முக்கியக் கருவியாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் வீழ்ந்தால், சர்வதேச கடல் வர்த்தகத்தின் மீது ஈரானால் அழுத்தம் கொடுக்க முடியாது.
மேற்கத்திய நாடுகளுடனும் சவுதி அரேபியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிராந்தியத்தில் தனக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டி ஈரான் பேரம் பேசும். ஹூதிகள் இல்லாத பட்சத்தில் அந்த பலம் ஈரானுக்குக் குறைந்து போகும். ஹூதிகளின் அமைப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் “நீண்ட கரம்” போன்றது. அந்த கரம் வெட்டப்பட்டால், ஈரானின் வெளியுறவுக் கொள்கையும் பிராந்திய பலமும் பெரும் சரிவைச் சந்திக்கும்.
கைவிட்ட டிரம்ப்!
மறுபுறம் ஹூதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற சவுதி அரேபியாவின் கோரிக்கையை டிரம்ப் நிராகரித்துள்ளார். ஹூதிகள் தங்களுடன் சண்டையிட விரும்பவில்லை என்றும், அமெரிக்கக் கப்பல்களைத் தாக்குவதில்லை என்று உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் டிரம்ப் கூறுகிறார். கடந்த ஆண்டு அமெரிக்கா ஹூதிகளுக்கு எதிராக நடத்திய Operation Rough Rider வான்வழித் தாக்குதல் மூலம், ஹூதிகளை முற்றிலுமாகப் பணிய வைத்துவிட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், அவர்களின் நிலத்தடி ஆயுதக் கிடங்குகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்பை அழிக்கவே முடியவில்லை. பின்னர் ஒரு வழியாக பரஸ்பரம் தாக்கிக் கொள்வதில்லை என ஹூதிகளும் அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதனால்தான், சவுதி அரேபியா எவ்வளவுதான் உதவக் கேட்டாலும், ஹூதிகளுடன் மீண்டும் ஒரு பெரிய வான்வழிச் போரில் இறங்கி முந்தைய தவறைச் செய்ய டிரம்ப் தயங்குகிறார்.
ஏமனில் தொடங்கப்பட்டுள்ள ‘Dawn of Yemen’ இராணுவ நடவடிக்கையும், சவுதியின் வான்வழித் தாக்குதல்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு புதிய போர் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் இந்த ராணுவ நகர்வுகளையும், வல்லரசு நாடுகளின் ராஜதந்திர முடிவுகளையுமே சார்ந்துள்ளது.

