
சர்ச்சைக்குரிய கிரிஷ் நிதி முறைகேடு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியலை எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கிரிஷ் நிதி முறைகேடு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த விரிவான வாதங்களை ஆராய்ந்த தலைமை நீதிவான், சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபர்கள் இருவரும் தமக்குப் பிணை கோரி தாக்கல் செய்துள்ள விண்ணப்பங்கள் மீதான இறுதித் தீர்மானம் மற்றும் கட்டளை எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி நீதிமன்றினால் அறிவிக்கப்படும் எனவும் தலைமை நீதிவான் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டைப் பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டிருந்த கிரிஷ் சதுக்கத் திட்டத்திற்கான அனுமதிகளை துரிதமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு கைமாறாக 70 மில்லியன் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு, குறித்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

