சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கை பர்மெலின் (Guy Parmelin) இந்தியாவுக்குப் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ பயணத்தின் போது, அவருக்கு விருது பெற்ற மூன்று இந்திய சீஸ் வகைகளைப் பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்துள்ளார். நீண்ட காலமாகச் சீஸுக்குப் பெயர்ப் பெற்ற ஒரு நாட்டுக்கு மத்தியில், இந்தியாவின் வளரும் பால் உற்பத்தித் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சைகை அமைந்தது.
இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை (05) புதுடெல்லி வந்தடைந்தார் பர்மெலின். இந்த ஆண்டில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த பெப்ரவரி மாதம் தலைநகரில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் (AI Impact Summit) அவர் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், போக்குவரத்துத் தொழில்நுட்பங்கள், நடமாடத்தக்க அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.
இந்தியாவின் சீஸ் பாரம்பரியம்
குல்மார்க் (Gulmarg), கொனார்க் (Konark) மற்றும் இயூர் (Yeoor) ஆகிய சீஸ் வகைகளும், இந்தியாவின் வளர்ந்து வரும் சீஸ் தயாரிப்பு பாரம்பரியத்தின் ஒரு சிறு பகுதியைக் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- குல்மார்க்: இது பாஸ்டுரைஸ் செய்யப்பட்ட (பாதுகாக்கப்பட்ட காய்ச்சப்பட்ட) பசுப் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட, பிரெஞ்சு பாணியிலான இதய வடிவ பிரீ (Brie) சீஸ் ஆகும். இது பனி வெள்ளை நிற மேலோட்டத்தினைக் (rind) கொண்டுள்ளதுடன், மண் மற்றும் காளான் போன்ற வாசனையைக் கொண்டது. மேலும், இது 2026 ஆம் ஆண்டிற்கான பிரேசில் முண்டியல் டொ கியுஜோ (Mundial do Queijo do Brasil) போட்டியில் ‘சூப்பர் கோல்ட்’ (Super Gold) விருதினை வென்றது.
- கொனார்க்: இது பிரெஞ்சு டோம் (Tomme) பாணியைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்டது. அதாவது நெகிழ்வான தன்மை, காரசாரமான சுவைகள் மற்றும் எலுமிச்சை போன்ற இறுதிச் சுவையைக் கொண்ட ஒரு இயற்கையான மேலோட்டுடன் கூடிய கிராமிய சீஸ் வகையாகும். இது 2023 ஆம் ஆண்டில் நோர்வேயில் நடைபெற்ற உலக சீஸ் விருதுகளில் தங்கப் பதக்கத்தையும், 2025 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வெள்ளிக் பதக்கத்தையும் வென்றது.
- இயூர்: இது சுவிஸ் க்ரூயேர் (Swiss Gruyère) சீஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, சுமார் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் வரை பதப்படுத்தப்பட்ட (matured) அல்பைன்-பாணி சீஸ் ஆகும். இதன் தயாரிப்பாளர்கள் இது நறுமணம், இனிப்பு மற்றும் மூலிகைத் தன்மையைக் கொண்ட சுவைகளை வழங்குவதாகக் கூறுகின்றனர். இதன் மேலோடு ரோஜா இதழ்கள் மற்றும் சோம்பினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சீஸ் ஃபொன்டு (fondue) மற்றும் கிரில்லிங் செய்வதற்கு மிகவும் ஏற்றது எனக் கூறப்படுகிறது.
சுவிஸ் நாட்டுடன் சுவையான உறவுமுறை
சுவிட்சர்லாந்து 450 க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சீஸ் வகைகளின் தாயகமாகும். சுவிஸ் பாரம்பரியத்தை மாதிரியாகக் கொண்டது மற்றும் ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் மதிப்பிடப்பட்டது உட்பட ஐரோப்பிய பாணிகளின் இந்திய வடிவங்களை வழங்குவது, ஒரு திட்டமிடப்பட்ட சமையற்கலை இராஜதந்திரமாக (culinary diplomacy) பரவலாகப் பார்க்கப்பட்டது.
இதனிடையே, இந்தியப் பிரதமர், சுவிஸ் ஜனாதிபதிக்குக் காஷ்மீரின் ஹிமலாய வாதுமை (walnut) மரத்திலான கையால் செதுக்கப்பட்ட சுவர் அலங்காரப் பலகையையும் வழங்கினார். இந்தச் செதுக்கல் பணியானது நிலப்பரப்புகள், தாவரங்கள், மனித உருவங்கள், குதிரைகள், வண்டிகள் மற்றும் கிராமக் காட்சிகளைச் சித்தரிக்கிறது. இது பூர்வீக மற்றும் மத்திய ஆசிய தாக்கங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கைவினைத் பாரம்பரியத்தைக் காட்டுகிறது.
இதேவேளை, ஜனாதிபதியின் மனைவி கரோலின் (Caroline) சூரத்தைச் சேர்ந்த ‘சடலி’ (Sadeli) பெட்டியில் வழங்கப்பட்ட கைத்தறி கச்சு ஷாலைப் பெற்றுக்கொண்டார். குஜராத்தைச் சேர்ந்த இந்த ஷால் வடிவமைப்பு வடிவங்கள் மற்றும் கூடுதல் வெப்ட் நெசவு (supplementary-weft weaving) ஆகியவற்றிற்குப் பெயர்பெற்றது. மேலும் இந்த மரப்பெட்டியானது, பாரம்பரிய வடிவியல் வடிவங்களில் துல்லியமாக அடுக்கப்பட்ட மாறுபட்ட பொருட்களால் கூட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பரிசு இராஜதந்திரம் பெரும்பாலும் பிராந்திய கைவினைப் பொருட்களையும் உணவு வகைகளையும் இணைத்தே வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.


